2009-06-11 14:47:30

உலகப் பொருளாதார வீழ்ச்சி வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும், திருப்பீடம்


சூன்11,2009. கடந்த ஐம்பது ஆண்டுகளில் வரலாறு காணாத அளவு உலகப் பொருளாதார வீழ்ச்சியை அனுபவித்து வருவதால் வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாகத் தன் கவலையை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அமைப்புகளுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி, சர்வதேச தொழிலாளர் கருத்தரங்கில் உரையாற்றிய போது இக்கவலையை வெளியிட்டார்.

பொருளாதார நெருக்கடியின் விளைவாக உணவு விலையேற்றத்தால் ஏழைநாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்றவேளை, இவ்வீழ்ச்சியை நிவர்த்தி செய்யவும் இத்தகைய நிலைகள் மீண்டும் நிகழாதிருக்கவும் போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார்.

ஒரு வேலையின் மாண்பு, சிறப்பு என்பது ஒரு மனிதனின் மாண்பு மதிக்கப்படுவதிலிருந்து பிறக்க வேண்டும், ஏனெனில் ஒருவர் தன் வேலையை இழக்கும் போது ஊதியத்தை இழந்து, பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கலாம், ஆனால் தன் மாண்பை இழப்பதில்லை என்பது இதன்மூலம் உறுதி செய்யப்படுகின்றது என்றார் பேராயர்.

வேலை என்பது ஒரு தனிமனிதனால் தனிமனித நலனுக்காக மட்டும் நடத்தப்படும் ஒன்றல்ல, மாறாக அது மனிதர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளவும் ஒன்றிணையவும் உதவும் சமூக நடவடிக்கை எனவும் வலியுறுத்தினார் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர்.

இன்றைய தொழில் நெருக்கடிகளை மேற்கொள்ள தகுதிக்கேற்றவேலை சிறுதொழில்கள் ஊக்குவிக்கப்படல் போன்றவை இன்றியமையாதவை என்பதையும் சர்வதேச தொழிலாளர் கருத்தரங்கில் பேராயர் சில்வானோ தொமாசி எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.