2009-06-10 15:34:39

புதுடெல்லி உயர்மறைமாவட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை புதிய முயற்சி


ஜூன்10,2009. இந்தியாவின் புதுடெல்லி உயர்மறைமாவட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதற்கெதிரான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

இந்நடவடிக்கைக்கென இரண்டு சிறப்பு சிறிய வாகனங்களைப் பயன்படுத்தும் புதுடெல்லி உயர்மறைமாவட்டம், மீண்டும் மீண்டும் பயன்படுத்தவல்ல சணல் பைகள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.

சர்வதேச சுற்றுச்சூழல் தினமான சூன் 5ம்தேதியன்று டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் இல்லத்தில் தொடங்கி வைக்கப்பட்ட இந்நடவடிக்கையில், டெல்லி உயர்மறைமாவட்ட பேராயர் வின்சென்ட் கொன்செஸ்ஸாவோ, தலத்திருச்சபை அதிகாரிகள், பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய டெல்லி பேராயர் கொன்செஸ்ஸாவோ, இந்த வாகனங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்த விளம்பரங்கள், செய்திகள் போன்றவைகளால் அலங்கரிக்கப்பட்டு நகர் முழுவதும் வலம் வந்து பிளாஸ்டிக் இல்லாத நகரை அமைப்பதற்கு மக்களை ஊக்குவிக்கும் என்றார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான திருச்சபையின் ஈடுபாட்டில் இது பெரிய முயற்சியாக இருக்கின்றது என்றுரைத்த பேராயர், டெல்லி மற்றும் அண்டை மாநிலமான ஹரியானாவின் எட்டு மாவட்டங்களையும் இவ்வாகனங்கள் சுற்றிவரும் என்றார்.

டெல்லி உயர்மறைமாவட்ட சமூகப்பணி மையமான செட்டானாலயா, மேற்கு வங்களாத்தில் செய்யப்பட்ட மூன்று இலட்சம் சணல் பைகளை சுயஉதவி குழுக்களின் உதவியுடன் கடந்த 12 மாதங்களில் விற்பனை செய்துள்ளது என்றும் பேராயர் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கென இந்தியாவில் முதன்முறையாக இத்தகைய முயற்சி டெல்லி உயர்மறைமாவட்டத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இம்மாத இறுதிக்குள் இன்னும் பத்து சுற்றுச்சூழல் வாகனங்கள் இப்பணிக்கென செயல்படும் என்று செட்டானாலயா இயக்குனர் அருட்திரு செபஸ்தியான் அறிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.