2009-06-10 15:36:45

கொரிய கத்தோலிக்கக் குருக்களும் புத்தமத துறவியும் சேர்ந்து அமைதி யாத்திரையை நடத்தியுள்ளனர்


ஜூன்10,2009. கொரிய மக்கள் வாழ்வையும் அமைதியையும் அனுபவிப்பதற்கு உதவும் நோக்கத்தில் இரண்டு கத்தோலிக்கக் குருக்களும் ஒரு புத்தமத துறவியும் 400 கிலோ மீட்டர் அமைதி யாத்திரையை நடத்தியுள்ளனர்.

ஒன்பது மாதங்களுக்கு முன்னர் தென் கொரியாவின் தெற்கிலுள்ள ஜிரிசான் மலைப்பகுதியில் இந்தப் பயணத்தைத் தொடங்கிய அவர்கள், வடகொரியாவோடு போர் நிறுத்த உடன்பாடு செய்யப்பட்ட இம்ஜின்காங் என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமையன்று நிறைவு செய்தனர்.

அமைதிக்கான இந்தப் பயணத்தில் ஒவ்வொரு மூன்று அடிகளுக்கும் ஒருமுறை தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கினர் மற்றும் இப்பயணம் முழுவதும் அமைதியாகச் சென்றனர் என்று யூக்கா செய்தி நிறுவனம் கூறியது.

இம்மூவருடனும் அந்தந்த இடங்களில் ஏறத்தாழ பத்தாயிரம் மக்கள் கலந்து கொண்டனர் என்றுரைக்கும் அச்செய்தி நிறுவனம், இப்பயணிகள், சமூக நெருக்கடிகள் மற்றும் மோதல்கள் பற்றிச் சிந்திக்க வைத்துள்ளனர் என்று கூறியது.

இம்மூவரில் அருட்திரு பவுல் மூன் என்ற கத்தோலிக்கக் குருவும் சுக்யுங் என்ற புத்தமத துறவியும் அந்நாட்டின் நில அபகரிப்பு பிரச்சனையை எதிர்த்து 2003ம் ஆண்டில் ஏறத்தாழ 310 கிலோ மீட்டர் அமைதி யாத்திரை ஒன்றை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.