2009-06-08 15:06:47

மெக்சிகோவில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் நடந்த தீ விபத்தில் நாற்பது குழந்தைகள்வரை உயிரிழந்துள்ளது குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை


ஜூன்08, 2009. மெக்சிகோவின் ஹெர்மோசிலோ நகரில் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் நடந்த தீ விபத்தில் நாற்பது குழந்தைகள்வரை உயிரிழந்துள்ளது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளியிடும் இரங்கற்தந்தியை அப்பகுதி பேராயருக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனேயால் அனுப்பப்பட்டுள்ள இவ்வனுதாபச் செய்தி, இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்குத் திருத்தந்தையின் ஆறுதலையும் செப உறுதியையும் தெரிவிக்கும்படி ஹெர்மோசிலோ பேராயர் ஹோசே யுலிசெஸ் மாசியாஸ் சால்செதோவை விண்ணப்பித்துள்ளது.

உயிரிழந்த குழந்தைகளுக்காக இறைவனிடம் செபிப்பதாகவும் அவர்கள் உறவினர்களின் துன்பங்களில் தானும் பங்கெடுப்பதாகவும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.

மெக்சிகோவின் ஹெர்மோசிலோ நகரில் கடந்த வெள்ளியன்று 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் தங்கியிருந்தவேளையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை நாற்பது குழந்தைகள்வரை உயிரிழந்துள்ளன, 33 பேர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழந்தைகள் காப்பகத்திற்கு அருகாமையில் உள்ள சக்கரம் மற்றும் வாகன உதிரிப்பாகக் கடையிலிருந்து தீ பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.



 








All the contents on this site are copyrighted ©.