2009-06-08 15:07:53

அமெரிக்க ஐக்கிய நாடு அமைதியை நோக்கி சரியான பாதையில் செல்கிறது, திருப்பீடப் பேச்சாளர்


ஜூன்08, 2009. எகிப்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டு அதிபர் பராக் ஒபாமா வழங்கிய உரை இருவேறு கலாச்சாரங்களிடையேயான மோதலை தவிர்க்கும் நோக்கில் அமைதியை நோக்கிய சரியான பாதையாக இருந்ததாக திருப்பீடப் பேச்சாளர் அருட்திரு பெதரிக்கோ லொம்பார்தி தனது பாராட்டை வெளியிட்டுள்ளார்.

ஒக்டாவா டியெஸ் என்ற தனது வாரத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இதனை எடுத்துரைத்த இயேசுசபை அருட்தந்தை லொம்பார்தி, சர்வதேச விவகாரங்களில் திருப்பீடத்தின் நிலைப்பாடானது பேச்சுவார்த்தை, ஆயுதக்களைவை ஊக்குவித்தல், சமய சுதந்திரம் போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டது எனவும் கூறினார்.

செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் இரு கலாச்சாரங்களிடையே குறிப்பாக இசுலாமிய மற்றும் மேற்கத்திய கலாச்சாரங்களிடையே மோதலாக உருவெடுக்கும் அபாயம் தணிக்கப்பட்டு வருகிறது என்றார் அருட்தந்தை லொம்பார்தி.

இஸ்ராயேலுக்கும் பாலஸ்தீனாவுக்குமிடையேயான முரண்பாடுகளைக் களைவது, அணுஆயுதக்களைவு, சமய சுதந்திரம், பெண்களின் மாண்பு, ஜனநாயகம் மற்றும் மக்கள் முன்னேற்றத் துறைகளில் கவனம் செலுத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் திருப்பீடப் பேச்சாளர் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.