2009-06-06 15:24:13

குருக்கள், கிறிஸ்துவின் கொடைகளுக்குக் காவலாளிகள் என்பதால் திருச்சபை அவர்களிடம் மிகுதியாக எதிர்பார்க்கிறது, திருத்தந்தை


ஜூன்06,2009. கிறிஸ்து மிகுந்த அன்புடன் கட்டிய குருத்துவத்தை குருக்கள் காக்க வேண்டியவர்கள் என்பதால் திருச்சபை அவர்களிடம் அதிகமாக எதிர்பார்க்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

உரோமையிலுள்ள ப்ரெஞ்ச் குருத்துவ கல்லூரியின் 102 பேரை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, அண்மித்து வரும் சர்வதேச குருக்கள் ஆண்டை நினைவுகூர்ந்து வருங்கால குருக்களிடம் எதிர்பார்க்கப்படும் எண்ணற்ற பண்புகளைக் குறிப்பிட்டார்.

மனித ஆளுமை வளர்ச்சி, ஆன்மீகப் பண்புகள், அப்போஸ்தலிக்க ஆர்வம், அறிவு வளர்ச்சி போன்ற குணநலன்கள் அவர்களுக்குத் தேவை எனக் குறிப்பிட்ட அவர், இப்பண்புகளை அவர்கள் தங்களுக்குக் குருத்துவ பயிற்சி கொடுப்போர் முன்னிலையில் மட்டும் வாழ்ந்து காட்டினால் போதாது, அப்பண்புகளின் நலனை முதலில் அனுபவிப்பவர்கள் அவர்களாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த ப்ரெஞ்ச் குருத்துவ கல்லூரி இதுவரை ஏறத்தாழ ஐயாயிரம் குருத்துவ மாணவர்களை உருவாக்கியிருப்பதையும் சுட்டிக் காட்டிய திருத்தந்தை, ஆர்ஸ் நகர் புனித குருவான ஜான் மரிய வியான்னியைப் பின்பற்றி பிரான்சில் அநேக இளைஞர்கள் குருத்துவ அழைத்தலை ஏற்பார்களாக என்றும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.