2009-06-03 13:06:46

ஏர் பிரான்ஸ் விமான விபத்தில் பலியானவர்களுக்குத் திருத்தந்தை செபம்


ஜூன்03,2009. இத்திங்களன்று ஏர் பிரான்ஸ் விமான விபத்தில் பலியான அனைவருடனான தமது ஆன்மீக ஐக்கியத்தைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே பிரான்சின் திருப்பீடத் தூதுவருக்கு அனுப்பிய தந்திச் செய்தியில் இவ்விபத்தில் பலியானவர்கள் இறைசாந்தியைப் பெற திருத்தந்தை செபிப்பதாகவும் இவர்களின் குடும்பத்தினருக்கான திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டு ரியோ தெ ஜெனைரோவிலிருந்து பாரிசுக்கு வந்துகொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானம், திங்களன்று அட்லாண்டிக் பெருங்கடலில் காணாமற்போயுள்ளது, அதில் பயணம் செய்த 228 பேரும் பலியாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 72 ப்ரெஞ்ச்க்காரர்கள், 26 ஜெர்மானியர் உட்பட 32 நாடுகளைச் சேர்ந்தோர் இதில் பயணம் செய்தனர்.

மேலும், இவ்விமான விபத்தில் பலியானவர்களுக்காக பாரிஸ் நோத்ரு தாம் பேராலயத்தில் இத்திங்களன்று செபவழிபாடு நடைபெற்றது. இப்புதனன்று அங்கு நடைபெறும் திருவழிபாட்டில் பிரான்ஸ் அரசுத் தலைவர் சர்கோசி உட்பட எண்ணற்றவர்கள் கலந்து கொண்டார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

வானில் கடுங்காற்றை எதிர்க்கொண்ட பின்னரும், மின்சாரப் பிரச்சினைகள் ஏற்பட்டதாகத் தகவல்தந்த பின்னரும் இவ்விமானம் காணாமல் போயுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இன்னும், அட்லாண்டிக் பெருங்கடலில் காணாமல் போன ஏர் பிரான்ஸ் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் தனது விமானங்கள் கடலில் மிதந்து கொண்டிருக்கும் துகள்களைக் கண்டதாக பிரேசில் நாட்டு விமானப்படை கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.