2009-06-02 12:33:15

நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமை . லூக்கா 18 , 1-5 .


இந்த உவமை சுவாஸ்ரஸ்யமான ஓர் கதை .



அந்தபெண்ணிடம் லஞ்சம் கொடுக்கப் பணம் இல்லை . நடுவரை மிரட்டவும் வழியில்லை . ஆனால் அவளிடம் விடாமுயற்சி இருந்தது . நடுவரை நச்சரித்துக்கொண்டே இருந்தாள் . ஒவ்வொரு நாளும் அவள் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருந்தாள் . இறுதியாக அவள் நடுவரைத் தீர்ப்பு வழங்குமாறு செய்துவிட்டாள் .

நடுவர் கடவுளாக உருவகிக்கப்பட்டுள்ளார் . உவமையின் குறிக்கோள் செபத்தில் விடாமுயற்சி பற்றியதாகும் . கடவுளுடைய உருவகம் கதைக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது . கடவுள் நீதியற்ற நடுவரல்லர் . நீதியற்ற நடுவரே விடாமுயற்சிக்குப் பணிவாரென்றால் நீதியுள்ள கடவுள் நம்மை கவனியாது விடுவாரா என்பதே கதையின் கருத்து . இதயமில்லாத நடுவரே மனம் இரங்குவாரெனில் அன்பே உருவான ஆண்டவர் நம் செபத்துக்கு இல்லை எனப் பதில் கூறுவாரா .

அந்தக் கைம்பெண் தூய்மைக்கும் , கைவிடப்பட்ட நிலைக்கும் மாதிரியாக உருவகிக்கப்பட்டுள்ளார் . அவள் ஏன் விடாது செபம் செய்து காத்திருக்கவேண்டும் என்ற கேள்வியையும் இந்த உவமை எழுப்புகிறது . செபம் கேட்கப்படாத நிலை பற்றியும் இந்தக் கதை கேள்வியை எழுப்பியுள்ளது . நமக்கு ஏன் என்பதற்கு முழுக்காரணமும் தெரியாது . அவ்வாறு தெரியுமென்றால் நாமே கடவுளாக இருப்போம் . அப்போது செபம் செய்யத் தேவையே இராது . ஆனால் நாம் என்ன புரிந்து கொள்ளவேண்டும் என்றால் நம்முடைய செபம் உறுதியாக ஆண்டவனால் கேட்கப்படும் .

கடவுள் காலம் தாழ்த்தி நம்முடைய எண்ணங்களைத் தூய்மைப்படுத்தலாம் . நம்மில் எத்தனைபேர் நாம் செபிக்கும் கருத்து நமக்கு நல்லது செய்யுமா என அறிவோம் . தூய பதுவை அந்தோனியாரின் கல்லறைக்கு கலிலேயோ செபிக்கச் சென்றார் . தமக்குச் செல்வம் வேண்டும் என்றும் தம் பிள்ளைகளுக்கு நல்ல உடல் நலம் வேண்டும் என்றும் செபிக்கச் சென்றவர் அதோடு தமக்கு நல்ல அறிவைத்தந்து மனுக்குலத்துக்குப் பயனுள்ள ஏதேனும் ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் வரம் கேட்டார் . கலிலேயோ நட்சத்திரக்கூட்டங்களையும் , உலகம் உருண்டையானது என்பதையும் கண்டறிந்து மிகப்பெரிய புரட்சியையே உருவாக்கினார் . கடவுள் காலம் தாழ்த்தி நம்முடைய வேண்டுதல் தீயாக கொழுந்துவிட்டு எரியும் வரை காத்திருக்கிறார் . நீதியற்ற நடுவர் மனம் மாறியது போல உலகம் மனம் மாற கடவுள் காலம் தாழ்த்துகிறார் . தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாது விடா முயற்சியோடு செபிக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டும் .

நாம் கேட்டவுடன் நாம் கேட்பது கிடைக்கவேண்டும் என நினைத்தால் நாம் மாஜிக்கை எதிர்பார்க்கிறோம் . அலாவுதீனும் அற்புத விளக்கும் போல மந்திர சக்தியால் மாங்காய் காய்க்குமாறு எதிர்பார்க்கிறோம் . அப்படிக் கிடைக்குமென்றால் யாரும் செபம் செய்யமாட்டார்கள் . செபமும் வாழ்வும் தலைகீழாக மாறிவிடும் . வீடு நெடுந்தூரத்தில் இருக்கும்போதுதான் நம்முடைய வீட்டின் அருமை நமக்குப் புலப்படுகின்றது . நாம் காத்திருந்து பெறும்போது கடவுள் தரும் வரமெல்லாம் விலை மதிப்பில்லாதவை . ஏசுவின் எந்தெந்த செபங்கள் விலைமதிப்பில்லாதவை ....... ஜெத்சமனித் தோட்டத்தில் ஏசு மூன்றுமுறை செபித்தும் கேட்ட வரம் கிடைக்கவில்லை . நாமோ அவசரக்காரர்களாக இருக்கிறோம் . உடனடியாக பணக்காரர்களாக விரும்புகிறோம் . நாமே இசையை மீட்டக் கற்றுக்கொள்ளாது பொத்தானை அமுக்கியதும் டேப்ரிக்கார்டரைப் பாடவைக்கிறோம் . பல சிரமங்களுக்கிடையே பயணம் மேற்கொண்ட நம் முன்னோர்களை விட மிக வேகமாக வாகனங்களில் செல்ல வானில் பறக்க நாம் கற்றுக்கொண்டிருக்கிறோம் . ஆனால் நம் ஆன்மீக வாழ்வில் அந்த அளவு வளர்ச்சி கண்டிருக்கிறோமா . நாம் செபிக்கும் போது காலம் வேகமாகக் கடந்து நம் செபம் கேட்கப்படாதது போலத்தெரிந்தாலும் கடவுள் பிரமாணிக்கமானவர் , நம் செபத்தைக் கேட்கிறார் என இந்த உவமை நமக்குக் கற்பிக்கிறது . நாம் கடவுள் பற்றில் தளராது உறுதியாக இருக்கவேண்டும் . நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது . துன்பங்களும் தோல்விகளும் நம்மை துவளுமாறு செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது . கடவுள் நம் சார்பாக இருக்கும் போது யாருக்கு நாம் அஞ்சவேண்டும் . நாம் கடவுளைப் பற்றிக்கொண்டால் , கடவுள் தரும் உறுதியான நம்பிக்கையை நமதாக்கிக் கொண்டால் வாழ்வு முழுவதும் வசந்தகாலத் திருநாளாகும் , பாதை முழுவதும் கீதங்கள் முழங்கும் .

 








All the contents on this site are copyrighted ©.