தூய ஆவியின்றி திருச்சபை வெறும் மனிதாபிமான நிறுவனமாகவே இருக்கும், திருத்தந்தை
ஜூன்01,2009. தூயஆவி திருச்சபையின் ஆன்மா, திருச்சபை இந்தத் தூய ஆவியின்றி வெறும் மனிதாபிமான
நிறுவனமாகவே இருக்கும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இயேசுவின்
சீடர்களும் அன்னைமரியாவும் எருசலேம் மாடி அறையில் தூயஆவியின் கொடைகளைப் பெற்றதை நினைவுகூரும்
பெந்தகோஸ்து பெருவிழாவையொட்டி இஞ்ஞாயிறு நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் இவ்வாறு
கூறினார் திருத்தந்தை.
வத்திக்கான் சதுக்கத்தில் கூடியிருந்த ஏறத்தாழ முப்பதாயிரம்
விசுவாசிகளுக்கு உரை வழங்கிய அவர், உண்மையாகவே பலர் தங்களது விசுவாசக் கண்களுக்கு வெளியே
திருச்சபையை நோக்குவதால் அது அவர்களுக்கு வெறும் மனிதாபிமான நிறுவனமாகவே காட்சியளிக்கிறது
என்றார்.
ஆனால், திருச்சபையின் உண்மையான இயல்பும் அதன் உண்மையான வரலாற்று பிரசன்னமும்
என்றென்றும் தூயஆவியாலும் ஆண்டவராலும் வழிநடத்தப்பட்டு உருவாக்கப்படுகிறது என்றும் திருத்தந்தை
கூறினார்.
திருச்சபை ஓர் உயிருள்ள உடல், அதன் உயிரோட்டமானது காணமுடியாத இறைஆவியின்
கனியாகும் என்ற பாப்பிறை, வழக்கமாக மே 31ம் தேதி சிறப்பிக்கப்படும் அன்னைமரியா எலிசபெத்தம்மாளைச்
சந்தித்த விழா பற்றிய சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்டார்.
இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட
விழாக்களில் மரியா மற்றும் திருச்சபையின் இளமைப்பருவம் ஒன்றிணைந்து வருகின்றது என்றுரைத்த
அவர், கிறிஸ்துவை தனது வயிர்றில் கருத்தாங்கிய இளம் மரியா தன்னை மறந்து பிறருக்கு உதவி
செய்யச் சென்றாள், இவள் மறைபோதகத் திருச்சபைக்கு வியத்தகு அடையாளமாக இருக்கின்றாள் என்றார்.
நம் காலத்திய திருச்சபை தூயஆவியால் தொடர்ந்து திடப்படுத்தப்பட அன்னைமரியாவின்
பரிந்துரையைக் கேட்போம் என்றும் கிறிஸ்துவுக்காக அடக்குமுறைகளால் துன்புறும் திருச்சபை
சமூகங்கள் ஆறுதல்தரும் தூயஆவியின் இருப்பால் உறுதிப்படுத்தப்படுவார்களாக என்றும் அல்லேலூயா
வாழ்த்தொலி உரையில் கூறினார் திருத்தந்தை.