2009-05-30 12:38:46

தூய ஆவியார் பெருவிழா …....31 -05 -09 .


நாம் இன்று தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம் . உயிர்த்த இயேசு சீடருக்குத் தோன்றி ஆவியாரை அவர்களுக்கு அளித்தது இன்றைய வாசகம் . உயிர்த்த இயேசு அளிக்கும் கொடைகளான சமாதானம் , பாவமன்னிப்பு ஆகியவை ஆவியாரின் பிரசன்னத்தின் வெளிப்பாடுகள் . பாவ மன்னிப்புப் பெற்று சமாதான வாழ்வு வாழ இன்றைய விழா நம்மைத் தூண்டுகிறது . பெந்தகோஸ்து என்பதற்கு ஐம்பதாவது நாள் என்று பொருள் .அதாவது செங்கடலைக் கடந்து பாஸ்கா விழா முடித்த ஐம்பதாவது நாள் இந்த பெந்தகோஸ்தே விழா அறுவடை விழா என்றும் முதற்கனிகளின் விழா என்றும் அழைக்கப்பட்டது . இத்தகைய ஒரு நன்றித்திருநாளின்போது இறைவன் தன் ஆற்றலையும் கொடைகளையும் தந்து திருத்தூதர்களை உறுதிப்படுத்தி திருச்சபையை நிறுவியது மிக்ப் பொருத்தமே . தமது மீட்புப்பணியை வெற்றிகரமாக முடித்த இயேசு கிறிஸ்து மாட்சிமையுடன் விண்ணோக்கிச் சென்று தான் ஏற்கனவே வாக்களித்தபடி இறை ஆற்றலாம் தூய ஆவியானவரை அனுப்புகிறார் .



வயது முதிர்ந்த ஒரு பிச்சைக்காரர் சாகும் தருவாயில் இருந்தார் . அவர் தம்முடைய கடைசி மகனை மிகவும் நேசித்தார் . அவனை அழைத்து மகனே நான் உனக்குக் கொடுப்பதற்கு ஏதும் இல்லை . இந்தப் பையும் அதோடு ஒரு கோப்பை மட்டுமே உள்ளது . இந்தக் கோப்பையை ஒரு பணக்காரப் பெண்மணி வீட்டுக்குப்பையலிருந்து எடுத்தேன் எனக் கூறிக் கொடுத்தார் . தந்தையின் இறப்புக்குப்பின் மகன் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தான் . ஒரு நாள் தங்க ஆசாரி ஒருவர் அவனுடைய கோப்பையில் காசு ஒன்றைப் போட்டார் . அதைப் போட்டபோது ஏற்பட்ட சத்தம் அவரை ஒரு நிமிடம் அந்தக் கோப்பையைச் சோதிக்கச் செய்தது. அந்தக்கோப்பை சுத்தத் தங்கத்தால் செய்யப்பட்டது . இளைஞனே ஏன் உன் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறாய் . நீ ஒரு பணக்காரன் . நீ வைத்திருக்கும் கோப்பை பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளது எனக்கூறினார் .

நாமும் அப்படியே நம்மிடமிருக்கும் செல்வத்தைப் பற்றித் தெரியாது இருக்கிறோம் . நம்முள் வாழும் தூய ஆவியானவரின் கொடைகள் பற்றித் தெரியாது இருக்கிறோம் . அவர் தரும் அருள் விலை மதிப்பில்லாதது . இன்றைய தூய ஆவியாரின் பெருவிழா நாளில் நாம் அவரது கொடைகளை நினைத்துப்பார்க்க அழைக்கப்படுகிறோம் . நாம் இன்று நம்முடைய திருமுழுக்கு நாளில் கொடுத்த வாக்குறுதிகளைப் புதுப்பிக்கவும் , உறுதிபூசுதல் நாளில் பெற்றுக் கொண்ட கொடைகளை நம்முடையதாக்கவும் நாம் தூய ஆவியாரின் அருள்பெற்ற மக்களாக வாழவும் அழைக்கப்பட்டுள்ளோம் .



உயிர்த்த இயேசு சீடருக்குத் தோன்றி ஆவியாரை அவர்களுக்கு அளித்தது இன்றைய வாசகம் .உயிர்த்த இயேசு அளிக்கும் கொடைகளான சமாதானம் , பாவமன்னிப்பு ஆகியவை ஆவியாரின் பிரசன்னத்தின் வெளிப்பாடுகள் . பாவமன்னிப்புப் பெற்று சமாதான வாழ்வு வாழ இவ்விழா நம்மைத் தூண்டுகிறது .



ஆவியானவரின் பலன்களாக அமைதி , பொறுமை , சாந்தம் முதலியவற்றைச் சுட்டுவார் பவுலடியார் . உயிர்த்த இயேசுவும் இருமுறை உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று கூறியே ஆவியாரை அளிக்கிறார் . இங்கு அமைதி என்ற சொல் நிறைவை , முழுமையைக் குறிக்கும் . பிறருடன் , கடவுளுடன் , நம்முடனே நமக்கிருக்கவேண்டிய உறவு நிறைவைச் சுட்டும் . இத்தகைய நிறையுறவை இயேசு ஒருவர்தான் தர முடியும் . அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன் . என் அமைதியை உங்களுக்கு அளிக்கிறேன் . நான் உங்களுக்கு அளிக்கும் அமைதி உலகம் தரும் அமைதி போலன்று என்பார் இயேசு . இந்த அமைதி ஆவியாரே . அவர் நம்மோடிருக்கும்போது , அவர் நமது துணையாளராக இருக்கும்போது நம்மிடம் சாந்தம் , பொறுமை , அமைதி குடிகொள்ளும் . ஆவியார் நமக்களிக்கும் சாந்தம் மயான அமைதியன்று , மாறாக நம்மை அன்புச் செயல்களுக்குத் தூண்டும் உறவு ஆகும் . எனவே நம்மை இவ்வுறவு நிலை முழுமையும் ஆட்கொள்ள ஆவியாரிடம் வேண்டுவோம் . அப்போது நாம் அமைதியின் கருவிகளாவோம் . வாரும் தூய ஆவியாரே .



கிறிஸ்து திருச்சபைக்கு அளித்த வரங்களுள் மேலானதொன்று பாவமன்னிப்பு . எவர்களுடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும் என்கிறார் இயேசு . கடவுளே தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே உருவாக்கியருளும் . ஆமென் .








All the contents on this site are copyrighted ©.