2009-05-30 15:18:01

இலங்கையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்து அதிகாரப் பூர்வமான விசாரணை நடத்தப்படுவது மிகவும் இன்றியமையாதது, ஜோன் ஹோல்ம்ஸ்


மே30,2009. மேலும், தமிழ் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசு மேற்கொண்ட போரின்போது கொலையுண்ட பொதுமக்களின் எண்ணிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதளவுக்கு மிக அதிகம் என்று சொல்லி அது குறித்து அதிகாரப் பூர்வமான விசாரணை நடத்தப்படுவது மிகவும் இன்றியமையாதது என ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்துள்ளார்.

போரின் இறுதி நாள்களில் ஆயிரமாயிரமாக பொதுமக்கள் இறந்துள்ளனர் மற்றும் இலங்கை இராணுவம் கடற்கரைப் பகுதியில் அமைந்த பாதுகாப்பு வலயத்தின் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்கியதாகக் கருதப்படுகிறது என்றுரைத்த அவர்,

இருதரப்புகள் மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் எழும்போது அந்தச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

காஸாவின் மீது இஸ்ரேல் இவ்வாண்டு தொடக்கத்தில் தாக்குதல் மேற்கொண்ட போது பெரும் எண்ணிக்கையில் பொது மக்கள் இறந்தது குறித்து விசாரணை நடத்த மனித உரிமை அவை அங்கீகாரம் வழங்கியிருந்ததையும் அவர் குறிப்பிட்டார்.

இன்னும், இலங்கை இராணுவத்தின் இறுதிக்கட்ட போரில் இருபதாயிரம் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருப்பதாக, த டைம்ஸ் பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, முன்னர் அறிவிக்கப்பட்டதை விட, மூன்று மடங்கு அதிகம் எனவும் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

எனினும் இலங்கை அரசு இதனை மறுத்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.