2009-05-28 17:33:56

உரோமை மறைமாவட்டக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார் திருத்தந்தை. 280509.


மே 26 , இந்த வாரம் செவ்வாய்க்கிழமை மாலையில் இங்குள்ள ஜான் லாத்தரன் பசிலிக்காவில் உரோமை மறைமாவட்டக் கத்தோலிக்கப் பிரதிநிதிகளின் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . அதுபோது தாங்கள் வாழும் பங்குத்தளங்களில் குருக்களுக்கு உதவி புரிவதோடு , திருச்சபையை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார் . பங்குத்தளங்களில் கத்தோலிக்கர்களின் முழுப்பகிர்வையும் ஊக்கப்படுத்த உரோமையில் மூன்று நாள் இம்மாதம் 29 தேதிவரை கருத்தரங்கு நடந்து வருகிறது .பங்குத்தளங்களில் திருச்சபை உறுப்பினர்களின் கடமை என்பது கருத்தரங்கின் மையக் கருத்தாகும் .



திருச்சபை பற்றிய நல்லறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தினார். நாம் அனைவரும் கிறிஸ்துவால் ஒரு குடும்பமாக வேற்றுமைகள் ஏதுமின்றி இணைக்கப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்தார் . திருச்சபை என்பது அதன் தலைவர்கள் மட்டுமல்ல என்பதை இறைமக்கள் உணரவேண்டும் எனத் தெரிவித்தார் திருத்தந்தை .



நம்முடைய விசுவாசத்தை இறைவனோடு கொண்டுள்ள நெருங்கிய உறவால் ஆழப்படுத்தவேண்டும் எனத் தெரிவித்தார் . நற்செய்தியை பிறரோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தினார் . பிறரன்பில் வளரவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை தேவையில் உள்ளோருக்கு உதவுமாறு கூறினார் .

உரோமைப் பங்குத்தளங்களில் வாழும் இறைமக்களுடைய ஈகைத் தன்மையால் உலகில் துன்புறும் மக்கள் திருச்சபை அவர்களுக்கு அருகில் உள்ளதாக உணர்ந்து இரக்கமுள்ள தேவன் அவர்கள் அருகிலிருப்பதையும் உணர அருள் மழை வேண்டினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.