2009-05-27 15:04:16

குருக்களின் அழைப்பு மற்றும் அவர்கள் பணியின் அசாதாரண அர்த்தத்தையும் பாராட்டுவதற்குச் சர்வதேச குருக்கள் ஆண்டு சிறப்பான காலமாக இருக்கின்றது, திருப்பீட குருக்கள் பேராயம்


மே27,2009. குருக்களின் தனித்துவத்தையும் கத்தோலிக்கக் குருத்துவத்தின் இறையியலையும் திருச்சபையிலும் சமூகத்திலும் குருக்களின் அழைப்பு மற்றும் அவர்கள் பணியின் அசாதாரண அர்த்தத்தையும் பாராட்டுவதற்குச் சர்வதேச குருக்கள் ஆண்டு சிறப்பான காலமாக இருக்கின்றது என்று திருப்பீட குருக்கள் பேராயம் அறிவித்தது.

சர்வதேச குருக்கள் ஆண்டை முன்னிட்டு திருப்பீட குருக்கள் பேராயத் தலைவர் கர்தினால் க்ளவ்தியோ கியூம்ஸ் வெளியிட்டுள்ள கடிதத்தில், குருக்கள், அவர்கள் செய்யும் திருப்பணிக்காக மட்டுமல்ல, அவர்கள் யார் என்பதற்காகவும் குருக்கள் முக்கியமானவர்கள் என்று சொல்லியுள்ளார்.

இந்த குருக்கள் ஆண்டில், குருக்கள் தங்கள் ஆன்மீக வாழ்வின் நிறைவை அடையவும் அதனைப் புதுப்பிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று திருத்தந்தை குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டியுள்ள கர்தினால் கியூம்ஸ், இவ்வாண்டு, குருக்களால், குருக்களுடன், குருக்களுக்காக செபிக்கும் செப ஆண்டாக சிறப்பான விதத்தில் அமைகின்றது என்று கூறியுள்ளார்.

குருக்களின் ஆன்மீகத்தின் மையமாகத் திருப்பலி இருக்கின்றது என்றும் குருக்களின் புனிதத்துவத்திற்காகத் திருநற்கருணை ஆராதணை செய்வது மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட அருட்சகோதரிகள் குருக்கள் மீது ஆன்மீகத் தாய்மையைக் காட்டி அவர்களுக்காகச் செபிக்க அழைக்கப்படுகின்றார்கள் என்றும் அக்கடிதம் தெரிவிக்கின்றது.

இச்சர்வதேச குருக்கள் ஆண்டை வருகிற ஜூன் 19ம் தேதி உரோமையில் திருத்தந்தை தொடங்கி வைக்கும் போது தலத்திருச்சபைகளும் அந்தந்த இடங்களில் சிறப்பான திருவழிபாடுகள் மற்றும் விழாக்கள் மூலம் அதனைத் தொடங்குமாறும் கேட்டுள்ளது கர்தினாலின் கடிதம்.

குருக்களின் பாதுகாவலராகிய புனித ஜான் மரிய வியான்னி இறந்ததன் 150ம் ஆண்டை முன்னிட்டு இயேசுவின் திருஇதய விழா மற்றும் குருக்களின் புனிதத்துவத்திற்கான சர்வதேச நாளான ஜூன் 19ம் தேதி இச்சர்வதேச குருக்கள் ஆண்டை தொடங்கி வைப்பார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.