2009-05-27 15:10:19

இலங்கையில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், நவநீதம்பிள்ளை வலியுறுத்தல்


மே27,2009. இலங்கையில் நடைபெற்ற இறுதி போரின்போது பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

இரு தரப்புகளும் போரின் போது மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற அடிப்படைக் கொள்கைகளை கடுமையாக மீறியுள்ளனர் என நம்புவதற்கு வலிமையான சான்றுகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமை அவை இலங்கை குறித்து இச்செவ்வாயன்று தொடங்கிய சிறப்புக் கூட்டத்தில் நவநீதம்பிள்ளை வழங்கிய ஒளி-ஒலிச் செய்தியில் இவ்வாறு தெரிவித்தார்.

அண்மையில் இலங்கையில் மீறப்பட்ட சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து தீவிரமாக ஆராய்வதற்கும், இவை எவ்வாறு நடந்தன, எவ்வளவு மோசமாக இடம்பெற்றுள்ளன, இவற்றுக்கு யார் காரணம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கும் நி்யாயமான நம்பகத் தன்மையுடைய சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இலங்கை அரசு பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியது, சரணடைய வந்த போராளிகளை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றது போன்ஙறவை கவலையளிக்கின்றன என்றார் அவர்.

அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்கள் வெளியேறுவதைத் தடுத்தனர். அத்துடன் அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர் என்றும் . நவநீதம்பிள்ளை கூறினார்.

மேலும், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை அரசு விசாரணைகள் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 17 நாடுகள் ஐ.நா.வின் மனித உரிமை அவையில் ஒரு முன்மொழிவை வைத்தன. இவற்றில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகள், சில லத்தீன் அமெரிக்க நாடுகள் ஆகும்.

 








All the contents on this site are copyrighted ©.