2009-05-23 13:39:56

பாகிஸ்தான் மக்கள் வெறுப்புணர்வை அகற்றி வாழ கிறிஸ்தவத் தலைவர்கள் அழைப்பு


மே23,2009. பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இராணுவத்துக்கும் தாலிபான்களுக்கும் இடையேயான மோதல்கள் வலுத்துவரும் வேளை, மக்கள் வெறுப்புணர்வை அகற்றி வாழுமாறு அழைப்புவிடுத்துள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவத் தலைவர்கள்.

சமயத் தீவிரவாதிகளாலும் புரட்சியாளர்களாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்சமூட்டும்நிலை நாட்டின் விதிமுறைகளுக்கு மட்டும் சவாலாக இல்லை, மாறாக ஜனநாயக அமைப்புமுறை பற்றிய குழப்பத்தையும் நாட்டு மக்களிடையே உருவாக்கி வருகின்றது என்று லாகூர் பேராயர் லாரன்ஸ் சல்தான்ஹா இவ்வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறினார்.

ஆயுதம் தாங்கிய குழுக்களின் நடவடிக்கைகள், பெருமளவில் மனிதவாழ்வுக்குச் சேதம் வருவிப்பது மட்டுமல்ல, அதோடு நாட்டின் இயல்பான அமைப்பையும் பாதிக்கின்றன என்று பேராயர் சல்தான்ஹா அறிவித்தார்.

பாகிஸ்தானில் அமைதி ஏற்படவும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கவுமென மே 30ம் தேதியை செப மற்றும் நோண்பு நாளாக அறிவித்துள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவத் தலைவர்கள்.

பாகிஸ்தானின் கத்தோலிக்க மற்றும் பிற கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் இணைந்து லாகூர் இயேசுசபை மையத்தில் நடத்திய கூட்டத்தின் முடிவில் இதனை அறிவித்தனர்.

இதற்கிடையே, ஸ்வாட் பள்ளத்தாக்குப் பகுதியின் தாக்குதல்கள் நகர்ப்புறங்களிலும் வன்முறையாக எதிரொலித்து வருகின்றன. இவ்வெள்ளியன்று பேஷ்வாரில் இடம் பெற்ற கார் குண்டு வெடிப்பில் 6 பேர் இறந்துள்ளனர் மற்றும் 75 பேர் காயமடைந்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.