2009-05-22 15:25:42

ஊடகங்களிலும் சமுதாயத்திலும் காழ்ப்புணர்வை நிறுத்துவதற்கு பல்சமய உரையாடல் உதவியாக இருக்கும், இந்திய ஆயர்


மே22,2009. ஊடகங்களிலும் சமுதாயத்திலும் காழ்ப்புணர்வை நிறுத்துவதற்கு பல்சமய உரையாடல் உதவியாக இருக்கும் என்று பூனே ஆயராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆயர் தாமஸ் தாப்ரே கூறினார்.

இஞ்ஞாயிறன்று 43வது உலக சமூகத் தொடர்பு தினம் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு ஆசிய செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த ஆயர் தாப்ரே, இந்திய சமுதாயத்தின் நல்லிணக்க வாழ்வுக்கு நவீன ஊடகங்கள் முன்வைக்கும் வாய்ப்புகள் மற்றும் ஆபத்துக்கள் பற்றியும் பேசினார்.

திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் உறுப்பினராகிய இவர் பேசுகையில், நேர்மையான மற்றும் ஒருங்கிணைந்த உணர்வுடன் பல்சமய உரையாடலை நடத்துவதற்குச் சமூகத் தொடர்பு சாதனங்கள் மிகுந்த உதவியாக இருக்கின்றன என்றார்.

சமூகத் தொடர்பு சாதனங்களுக்கும் பல்சமய உரையாடலுக்கும் இடையே பிரிக்க முடியாத பிணைப்பு இருக்கின்றது என்பதையும் சுட்டிக்காட்டிய ஆயர், அனைத்து சமூகத் தொடர்பு சாதனங்களும், கலாச்சாரங்களும் மதங்களும் சந்திப்பதற்கு வழி அமைக்கும் முக்கிய வளங்களாக இருக்கின்றன என்றார்.

புதிய உறவுகள், மதிப்பு, உரையாடல் மற்றும் நட்புறவு கலாச்சாரத்தை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் 43வது உலக சமூகத் தொடர்பு தினம் மே 24ம் தேதி இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.