2009-05-21 07:58:24

திருத்தந்தையின் புதன் மறைபோதகம். - புனித பூமிக்கான அமைதித் திருப்பயணம்.


20.05.2009 இப்புதனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புனித ராயப்பர் பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய பொது மறைபோதகம், அவரின் புனித பூமிக்கான அண்மைத் திருப்பயணம் குறித்ததாய் இருந்தது.

"என் அண்மை திருப்பயணம் நம் விசுவாசத்தின் ஆதாரமான இடங்களுக்கான பயணமாகவும், நம் ஆண்டவரின் பிறப்பு, இறப்பு மற்றும் உயிர்ப்போடு தொடர்புடைய இடங்களில் வாழும் கிறித்தவ சமூகங்களுக்கான மேய்ப்புப் பணிச் சார்ந்த சந்திப்பாகவும் இருந்தது.

இத்திருப்பயணத்தில் எனக்கு உதவிய அரசு அதிகாரிகள், லத்தீன் ரீதி பிதாப்பிதா, தலத்திருச்சபையின் ஆயர்கள், புனித தலங்களுக்கு பொறுப்பாய் இருக்கும் பிரான்சிஸ்கன் துறவிகள் மற்றும் இதில் உதவிய அனைவருக்கும் நன்றியை வெளியிடுகிறேன்.

அமைதிக்கான பணியில் ஒத்துழைப்பு, ஒப்புரவு மற்றும் ஒருவர் மற்றவர்க்கான மதிப்பை ஊக்குவிப்பதற்கென, ஒரே கடவுளில் நம்பிக்கைக் கொண்டுள்ள யூத, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவர்க்களிடையே நம் ஒத்த அர்ப்பணத்தை நினைவுறுத்தும் அமைதியின் திருப்பயணியாகவே என் திருப்பயணம் முழுவதும் ஆவல் கொண்டேன்.

அமைதியின் நகராயிருக்கும் மற்றும் மும்மதங்களின் முக்கியத்துவம் கொண்டதாயுள்ள யெருசலேமில், அதன் புனித தலங்களில் குறிப்பாக மேற்கு சுவரிலும் மலைககோவிலிலும் இச்செய்தியைத்தான் எடுத்துச்சென்றேன்.

மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்று, Yad Vashem யூத மக்களின் படுகொலைகளை நினைவுகூர்ந்து செபித்தது. அம்மனிலும், யெருசலெமிலும், பெத்லேகம் மற்றும் நாசரேத்திலும் திருப்பலிகளை நிறைவேற்றியது தலத் திருச்சபைகளுக்கான என் சந்திப்பின் மணிமகுடமாக இருந்தது. தனியார்களுக்கும் மனிதகுல சமூகத்திற்கும் நம்பிக்கையின் செய்தியைப் பரப்பிக் கொண்டிருக்கும் யேசுவின் காலியானக் கல்லறையிலும், கல்வாரியிலும் செபித்ததுடன் என் திருப்பயணம் நிறைவுக்கு வந்தது. அண்மைக் கிழக்கு நாடுகளின் தேவைகளுக்காகவும், அப்பகுதி முழுமைக்குமான அமைதி எனும் கொடைக்காகவும் ஜெபிக்குமாறு, என் திருப்பயணத்தில் கிட்டிய பல ஆசீர்வாதங்களுக்கான நன்றியுடன் உங்களை நோக்கி வேண்டுகிறேன்." எனக் கூறி தன் புதன் மறைபோதகத்தை நிறைவு செய்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.