2009-05-16 11:45:52

உயிர்ப்பு விழாவுக்குப் பின்னர் 6 ஆவது ஞாயிறு மறையுரை – 16-5 சனி.


இறைவா உமது அன்பையும் அருளையும் இந்நாளில் கொண்டாடும் நாங்கள் நீர் எமக்குத் இன்று தருவதை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்ள அருள் தாரும் . எங்கள் இதயங்களை அர்ச்சித்தருளும் . நீர் விரும்புவதைக் கேட்கவும் , நீர் விரும்புவதைக் காணவும் , நீர் விரும்புவதையே செய்யவும் அருள் தாரும் .



இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட இரவில் தம் சீடர்களிடம் இவ்வாறு கூறினார் .



இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன் . ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது . உங்களை நான் நண்பர்கள் என்றேன் . ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன் . நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை . நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன் .



நம் வாழ்வின் சில மிக முக்கிய கட்டங்களும் சில மோசமான நேரங்களும் நாம் தேர்ந்து கொள்ளப்படுவதைப் பொறுத்து இருக்கிறது .



பள்ளியில் விளையாட்டுக் களத்தில் நாம் குழுத் தலைவர்களால் தேர்ந்து கொள்ளப்படவில்லை என்றால் , அல்லது நம்மைக் கடைசியாகத் தேர்ந்து கொள்கிறார்கள் என்றால் , அல்லது தேர்ந்து கொண்டபிறகு விளையாட அனுமதிக்கப்பட வில்லையென்றால் வருத்தப்படுவோம் . நம்மை தகுதியற்றவர்கள் எனப் பிறர் கருதும்போது நாம் ஒதுக்கப்படுகிறோம் .



நாம் தேர்ந்துகொள்ளப்படும்போது , கல்லூரி விளையாட்டுக் குழுவில் சேர்க்கப்படும்போது , நம் தகுதியைப் பொறுத்து அல்ல , தேர்ந்து கொள்பவரின் நன்மைத்தனத்தைப் பொறுத்து நம்மை அவர் தேர்ந்துகொள்ளும்போது , கல்லூரி விளையாட்டுக்குழுவில் சேர்க்கப்படும்போது நாம் மிக மகிழ்ச்சிப்படுகிறோம் .



கல்லூரியில் நாம் விரும்பும் பாடத்தைப் படிக்க வாய்ப்புத் தரப்படும்போது நாம் மகிழ்ச்சிப்படுகிறோம் . அல்லது கல்லூரியே நம்மை மிகச் சிறந்த பிரிவு ஒன்றில் சேர்வதற்கு நம்மை விரும்பி அழைக்கும்போது நாம் மகிழ்ச்சியும் பெருமையும் படுகிறோம் .



நாம் தேர்ந்துகொள்ளப்படும்போது எத்துணை மகிழ்ச்சிப்படுகிறோம் . மறக்கமுடியாத அனுபவத்தைப் பெறுகிறோம் . நாம் பிறருக்கு முக்கியமாகப்படும்போது , நாம் மதிக்கப்படும்போது , நாம் விரும்பப்படும்போது பெருமகிழ்ச்சி கொள்கிறோம் .



தேர்ந்து கொள்ளப்படுவது மிகவும் முக்கியமானது .



இன்றைய நற்செய்தியில் கடவுளின் திருமகன் நம்மைத் தேர்ந்து கொண்டதாகக் கூறுவதைக் கேட்கிறோம் . கடவுளால் தேர்ந்து கொள்ளப்படுகிறோம் . ஊழியர்களாக இருப்பதற்கு அல்ல , நண்பர்களாக இருப்பதற்காகத் தேர்ந்து கொள்ளப்பட்டுள்ளோம் . நாம் அவரைத் தேர்ந்துகொள்ளவில்லை , அவர் நம்மைத் தேர்ந்து கொண்டுள்ளார் .



நாம் அனைவரும் , நீங்களும் நானும் இயேசுவால் முக்கியமானவர்களாகக் கருதப்பட்டுள்ளோம் . வாழும் இறைவனின் மகனால் நாம் மிக முக்கியமானவர்களாகக் கருதப்பட்டுள்ளோம் .

இதன் அர்த்தம் எனன . நம்மை ஒருவர் அன்பு செய்யவதாகக் கூறும்போது , அல்லது நம்மை மிகவும் முக்கியமானவர்களாகக் கருதும்போது அதை நாம் நம்புவதற்குத் தயங்குகிறோம் . ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறோம் . அவர்கள் நம்மை அன்பு செய்வதை நாம் ஏற்றுக் கொள்ளத் தயங்குவதற்குக் காரணம் நம்மில் ஏதோ ஒன்று தடுக்கிறது . நாம் அந்த அன்புக்கு அருகதை அற்றவர்களாக நம்மைக் கருதுகிறோம் . நம்முடைய தகுதியின்மை , நம்முடைய பாவ வாழ்க்கை , அல்லது நம்முடைய திறமையில்லாமை இந்த அவநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கலாம் .



வாழ்க்கைப் பயணத்தில் நாம் பலருடைய உறவை நிராகரிப்பதற்குக் காரணம் அவர்கள் அல்ல , நம்மில் இருக்கும் சில பழக்க வழக்கங்களே காரணமாக இருக்கலாம் . ஒருவேளை நாம் இந்த நட்பு நிலைக்குமா என்றோ , நம்மைப் பற்றிய உண்மைகளைப் பிறர் அறிந்து விடுவார்கள் என்றோ , அல்லது வேறு என்ன காரணமோ நமக்கு அவர்களுடைய நட்புத் தேவை என நாம் கருதும் அதே வேளையில் அவர்கள் அன்பை நாம் நிராகரித்து விடுகிறோம் .



நம்மில் பலருக்கு எவ்வளவு பயம் என்றால் நம்மைப் பிறர் தேர்ந்து கொள்ளும்போது கூட அஞ்சுகின்றோம் . நம்மைத் தேர்ந்து கொண்டதற்காக மகிழ்ச்சிப்படுவதற்குப் பதிலாக நாம் அஞ்சுகின்றோம் .



நாம் தேர்ந்து கொள்ளப்படும்போது தேர்ந்து கொள்பவர்களைச் சந்தேகப்படுகின்றோம் . நம்மைப் பயன்படுத்துவதற்காகவே நாம் தேர்ந்து கொள்ளப்பட்டதாக நினைக்கிறோம் . நம்மைத் தேர்ந்துகொண்டவருக்கு நாம் ஊழியம் செய்யவே தேர்ந்து கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கிறோம் .



இவ்வாறு சந்தேகப்படத் தேவையில்லை . எல்லோருமே நம்மை சுயநலத்துக்காகப் பயன்படுத்துபவர்கள் அல்லர் . நம்மை எல்லோருமே வெளிப்புறத் தோற்றத்தைக் கண்டு தீர்ப்பிடுவதில்லை . நம்மிடமிருந்து எல்லோருமே எதையாவது பெறுவதற்காக நம்மைத் தேர்ந்து கொள்வதில்லை .



நாம் இன்றும் என்றும் இயேசு நம்மைத் தேர்ந்து கொண்டதாகக் கூறுவதற்குச் செவிமடுக்க வேண்டும் . அவர் நம்மை நன்கு அறிவார் . நாம் நன்றாக வாழ்ந்திருந்தோமோ தவறாக வாழ்ந்திருந்தோமோ அவர் நம்மைத் தேர்வு செய்துள்ளார் .



அவர் நம்மை ஊழியர் என்றோ பணியாளர் என்றோ அழைக்கவில்லை . நம்மை நண்பர்கள் என அழைக்கிறார் . கடவுள் ஆபிரகாமையும் , மோசேயையும் , தாவீதையும் , பவுல் அடிகளாரையும் , நண்பர் என அழைத்திருந்தார் . இயேசுவுக்கு உரோமைய மன்னர்களும் , கீழைநாடுகளின் வேந்தர்களும் தம் நண்பர்களிடம் நடந்து கொண்டமுறையை அறிந்திருந்தார் . தம் நண்பர்கள் தமது படுக்கையறைக்கு வருவதற்கும் மன்னர்கள் அனுமதி அளித்திருந்தார்கள் . படைத் தலைவர்களும் , அரசு அதிகாரிகளும் , மன்னரைக் காண்பதற்கு முன்னர் அவருடைய நண்பர்கள் அவரைக் காணமுடியும் . மன்னருடைய நண்பர்கள் அவரோடு மிக நெருங்கிய உறவு கொண்டவர்கள் .



அதேபோல நாம் தொலைவிலிருந்து இயேசுவைக் காணவேண்டிய அவசியம் இல்லை . நாம் அடிமைகளோ ஊழியர்களோ அல்ல அவருடைய நண்பர்கள் . அவர் நம்முடைய உள்ளத்தின் தேவைகளை , ஏக்கங்களை கவலைகளை நன்கு அறிவார் .



அவர் நம்மை நன்கு அறிவதால் நம்மில் ஒருவரானார் . மனு உரு எடுத்தார் . அவர் நம் மண்ணில் நடந்துள்ளார் . நம்மோடு அழுதுள்ளார் , சிரித்துள்ளார் . அதனால்தான் நற்செய்தி மிக முக்கியமானதொன்றாக இருக்கிறது .



நாம் அவருடைய நண்பர்கள் . நம் வாழ்க்கை நலமுள்ளதாக இருக்க வேண்டும் . கனி தரவேண்டும் . நாமும் பிறரிடம் நம் அன்பைப் பகிர்வோம் . இறைச் சாயலில் படைக்கப்பட்ட மக்கள்மீது நம் அன்பைப் பொழிவோம் . என் அன்பில் நிலைத்திருங்கள் எனக் கூறும் இயேசு நீங்கள் ஒருவர் ஒருவரிடம் அன்பு கூருங்கள் எனக் கட்டளையிடுகிறார் . ஏனெனில் திருத்தூதர் யோவான் கூறுவது போல நம் கண் முன்னே உள்ள சகோதர சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர் , கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும் . எனவே பிறருக்கு , சிறப்பாக நலிந்தோருக்கு நன்மை செய்வோம் . அன்பு காட்டுவோம் . அதுவே நாம் இறைவனால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் , அன்பு செய்யப்பட்டவர்கள் என்பதற்குச் சாட்சியம் .



நாம் அனைவரும் இணைந்து செபிப்போமா .



அன்புள்ள இறைவா நீர் எங்களைத் தேர்ந்து கொண்டதற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம் . நாங்கள் உம்முடைய நண்பர்களாக வாழ அருள்புரியும், ஆமென் .








All the contents on this site are copyrighted ©.