2009-05-15 14:40:58

இரத்தம் சிந்துதலோ, சண்டையோ பயங்கரவாதமோ, மோதல்களோ இனி வேண்டாம், திருத்தந்தை


மே15,2009. உரோமைக்குத் திரும்பும் இந்நேரத்தில் புனிதபூமிக்கான இந்தத் திருப்பயணம் ஏற்படுத்திய சில சக்திபடைத்த தாக்கங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். மக்களின் நலவாழ்வைப் பாதுகாப்பதில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய அரசுகள் மிகுந்த முயற்சிகளை எடுக்கின்றன. கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடலுக்கு இந்நிலம் உண்மையிலேலே வளமானதாக இருக்கின்றது. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் மற்றும் மதிப்பதில் வளர இங்குள்ள பல்வேறு வளமையான பல்சமயத்தன்மை சான்று பகரும் என நம்புகிறேன். இஸ்ரேல் அரசுத்தலைவர் மாளிகையில் எனது இந்தப் பயணத்தின் முதல் நாளில் ஒலிவ மரத்தை நட்டேன். ஒலிவ மரம், கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் இடையேயான நெருங்கிய உறவின் அடையாளமாக இருக்கின்றது என்று புனித பவுல் விளக்கியிருக்கிறார். யாட் வாஷெம் நினைவிட்த்திற்குச் சென்ற போது யூதமத விரோதப்போக்கு மற்றும் காழ்ப்புணர்வு கொண்ட கடவுணர்வற்ற அரசினால் எண்ணற்ற யூதர்கள் பூண்டோடு அழிக்கப்பட்ட ஆஷ்விஷ் வதைப்போர் முகாமின் நினைவுகள் நிழலாடின. வரலாற்றின் இந்தக் கொடுமையான அத்தியாயம் மறக்கப்படக்கூடாது அல்லது மறுக்கப்படக்கூடாது. மாறாக, ஒரே ஒலிவ மரத்தின் கிளைகள் போல இந்த இருண்ட நினைவுகள் ஒருவர் ஒருவரோடு நெருக்கமாக வருவதற்கான நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்த வேண்டும் என்றார் திருத்தந்தை.

பாலஸ்தீனியரின் நண்பர் போன்று இஸ்ரேயலரின் நண்பனாகவும் உங்கள் நாட்டிற்கு வந்தேன். நண்பர்கள் ஒருவர் மற்றவரோடு நேரம் செலவழிப்பதில் மகிழ்வார்கள். கடந்த 60 ஆண்டுகளாக இவ்விரு தரப்பு மக்களும் எதிர்கொண்ட உயிரிழப்புகளும் துன்பங்களும் இனி நிகழாதிருக்கட்டும். இரத்தம் சிந்துதலோ, சண்டையோ பயங்கரவாதமோ, மோதல்களோ இனி வேண்டாம். நீதியின் அடிப்படையிலான நிலைத்த அமைதி நிலவட்டும். உண்மையான ஒப்புரவும் குணப்படுத்தலும் இடம் பெறட்டும். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இஸ்ரேல் நாடு இருப்பதற்கான உரிமையைக் கொண்டிருக்கட்டும். சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் இஸ்ரேல் நாடு அமைதியையும் பாதுகாப்பையும் அனுபவிக்கட்டும். அதேபோல் பாலஸ்தீனியரும் மாண்புடன் வாழவும் சுதந்திரமாகப் பயணம் செய்யவுமான இறையாண்மை கொண்ட தனிப்பட்ட தாயகத்தைக் கொண்டிருக்க உரிமை கொண்டுள்ளார்கள். இந்த இரண்டு நாடுகளின் தீர்வுகளும் கனவாகவே இருக்காமல் நிஜமாகட்டும்.

இந்தப் பயணத்தில் தடுப்புச் சுவரைக் கடந்து செல்லும் போது மிகவும் வருத்தமடைந்தேன். இத்தகைய பாதுகாப்பு மற்றும் பிரிவினைக் கருவிகளுக்கானத் தேவையின்றி புனிதபூமி மக்கள் எதிர்காலத்தில் அமைதியிலும் நல்லிணக்கத்திலும் வாழவேண்டுமென்று செபிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. கடவுள் உங்களோடு இருப்பாராக, ஷாலோம் என்று சொல்லி இந்தப் பயணத்தின் இறுதி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை








All the contents on this site are copyrighted ©.