2009-05-13 20:11:16

பாலஸ்தீனப் பகுதியில் திருத்தந்தை 130509 .


பாலஸ்தீனப் பகுதியில் திருத்தந்தைக்கு அந்நாட்டுக் குடியரசுத்தலைவர் மகமது அப்பாஸ் அளித்த வரவேற்புரைக்கு நன்றி கூறிய திருத்தந்தை எல்லோருக்கும் தம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார் . அவருடைய புனித பூமித் திருப்பயணம் இயேசுக்கிறிஸ்து பிறந்த பெத்லகேமுக்கு வராவிட்டால் நிறைவாக இருக்கமாட்டாது என்றுரைத்தார் . குடியரசுத்தலைவர் அப்பாஸ் இங்கு வர விடுத்த அழைப்பை ஏற்று பாலஸ்தீன மக்களைக் காண வந்துள்ளேன் என்றார் . அந்தப் பகுதியில் பல காலமாக தாக்கம் ஏற்படுத்தும் போர்களின் சூழலில் அங்குள்ளோர் படும் துயரத்தைத் தாம் அறிவதாகத் தெரிவித்தார் . அங்கு வீடிழந்த அனைத்துக் குடும்பத்தினரின் துயரிலும் நான் பங்கேற்கிறேன் என்றார் . மாலையில் வீடிழந்து முகாம்களில் வாழும் மக்களைக் காணப்போவதாகக் கூறி்னார் .



குடியரசுத் தலைவர் அவர்களே பாலஸ்தீன நாடு தனி ஆட்சி அமைத்து இங்கு வாழ்வதற்கும் தமது அண்டை நாட்டாரோடு பாதுகாப்பான உறவில் வாழவும் உரிமை உள்ளது எனத் தெரிவித்தார் . அந்தக் கனவு தற்போது நனவாவது சாத்தியப்படாதது போலத் தெரிந்தாலும் நம்பிக்கை தீபத்தை அணையாது காத்திடுமாறு அறிவுறுத்தினார் . பாலஸ்தீனமும் இஸ்ராயேலும் நியாயப்படி கொண்டுள்ள ஏக்கங்களை பெறுவதற்கு வழி பிறக்கும் எனக் கூறினார் . முந்நாள் திருத்தந்தை கூறியபடி நீதியில்லாது அமைதியில்லை . மன்னிப்பு இல்லாது நீதியில்லை என்றுரைத்தார் . மற்றவர்களுடைய மாண்பை மதித்து வருத்தங்களையும் பிரிவினைகளையும் நீக்கிவிட்டு சமாதானத்துக்குத் தாராள மனத்தோடு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார் திருத்தந்தை .



பாலஸ்தீன மக்கள் மற்றவரகளைப்போல திருமணம் புரிந்து கொள்ளவும் , குடும்பங்களில் வாழவும் , கல்வி , சுகாதாரம் , வேலை வாய்ப்பைப் பெறவும் உரிமையுள்ளவர்கள் என்றார் . அகில உலக ஒத்துழைப்போடு மறுவாழ்வுத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட தாம் பெரிதும் விழைவதாகத் திருத்தந்தை தெரிவித்தார் . நிறைந்த அமைதிக்கும் வளமான வாழ்வுக்கும் மறுவாழ்வுத்திட்டங்கள் செயலாக்கம் பெறுவது அவசியம் என வலியுறுத்திக்கூறினார் .



தம் உரையின் முடிவில் நாட்டுத்தலைவர் அப்பாசுக்கும் பாலஸ்தீன நாட்டு மக்களுக்கும் இறை ஆசியையும் தந்தையாகிய கடவுளின் பாதுகாத்தலையும் வேண்டி மன்றாடி , கிறிஸ்து பிறந்தபோது வானவர்கள் பாடிய நில உலகில் அமைதியும் மக்களிடையே நல்லுள்ளமும் நிலவுமாறு கூறியவை நிறைவேறுமாறு செபித்தார் . கடவுள் உங்களோடு இருப்பாராக எனக் கூறி வாழ்த்தினார் .








All the contents on this site are copyrighted ©.