2009-05-13 14:38:20

திருத்தந்தையின் புனிதபூமித் திருப்பயணம்


மே13,2009. எருசலேமில் ஜோசபாத் சமவெளிப்பகுதி கெத்ஜெமனி பசிலிக்காவுக்கும் ஒலிவத் தோட்டத்திற்கும் முன்னால் உள்ளது. இவ்விடத்தில் நேற்று மாலை திருப்பலி நிகழ்த்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். ஒலிவ மரங்களுக்கிடையேயான மைதானத்தில் நடைபெற்ற திருப்பலியில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட விசுவாசிகள் கலந்து கொண்டனர். இவர்கள் அரசின் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் சோதனைகளுக்கும் உட்பட வேண்டியிருந்தது. இத்திருப்பலியின் துவக்கத்தில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசிய எருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதா பவுத் த்வால், பாலஸ்தீனியரின் சுதந்திர தாகத்தையும் அவர்களின் துன்பங்களையும் இஸ்ரேல் மக்களின் அமைதி மற்றும் பாதுகாப்புடன்கூடிய வாழ்வுக்கான கனவையும் எடுத்துச் சொன்னார்.

இன்று புதன்கிழமை திருத்தந்தை இயேசு பிறந்த பெத்லகேம் சென்றார். இஸ்ரேல் அரசு ஓங்கி உயரமாகக் கட்டியுள்ள வெஸ்ட் பாங்க் தடைச்சுவரையொட்டி காரில் பயணம் செய்து பெத்லகேம் வந்தடைந்த அவரை பாலஸ்தீனிய அரசுத்தலைவர் மகமுத் அபாஸ், அரசு மற்றும் மதத்தலைவர்கள் குழுமியிருந்து வரவேற்றனர். பெத்லகேம் அரசுத்தலைவர் மாளிகைக்கு முன்பாக இவ்வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்தந்தை வத்திக்கான் நாட்டுத் தலைவர் என்ற முறையில் இராணுவ அணிவகுப்பு மரியாதை பாலஸ்தீனிய அரசால் வழங்கப்பட்டது. இதில் உரையாற்றிய பாலஸ்தீனிய அரசுத்தலைவர் மகமுத், பாலஸ்தீனிய மக்கள் துன்பம் தாங்க முடியாமல் வெளியேறி வருவதால் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது. புனிதபூமியில் உறவுப்பாலங்களுக்குப் பதிலாகப் பிரிவினைச் சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன. கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இங்கிருந்து வெளியேறினால் மதவழிபாட்டு இடங்கள் வெறும் அகவாய்வுகளின் சரித்திர இடங்களாக மட்டும் மாறிவிடும். வெஸ்ட் பாங்க்கைச் சுற்றி இஸ்ரேலால் கட்டப்பட்டுள்ள இனவெறிச் சுவரால் பாலஸ்தீனியர்கள் எருசலேம் புனிதத்தலங்களைத் தரிசிக்க முடியா நிலை உள்ளது என்றார்.

பின்னர் இயேசு பிறந்த இடத்தின் மாடடை குடிலின் வைக்கோற்போர் என்ற வளாகத்தில் திருப்பலி நிகழ்த்தினார் திருத்தந்தை. ஏறத்தாழ பத்தாயிரம் பேர் இதில் பங்கெடுத்தனர். ஏறத்தாழ 500 காவல்தூறையினர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். பின்னர் மாலை 3.30 மணிக்கு பெத்லகேமின் இயேசு பிறந்த இடத்தைக் காணச் சென்றார்.










All the contents on this site are copyrighted ©.