2009-05-12 15:14:21

யூதமதப் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தையின் உரை


மே12,2009. யூதர்களுடனான சமய உறவுகளுக்கான திருப்பீடக் குழுவும் கத்தோலிக்கத் திருச்சபையுடனான உறவுகளுக்கான இஸ்ரேல் குழுவும் நடத்தியுள்ள உரையாடலால் கிடைத்த ஆசீர்வாதங்களுக்கு நன்றி சொல்வதற்கானச் சரியான தருணமாக இச்சந்திப்பு அமைகின்றது. மனித வாழ்வின் புனிதத்துவம், குடும்பத்தின் முக்கியத்துவம், இளையோர் கல்வி, சமய சுதந்திரம், ஆரோக்யமான ஒரு சமுதாயத்தின் மனச்சான்று போன்றவை குறித்து யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். இஸ்ரேலில் சிறுபான்மையாக வாழும் கிறிஸ்தவர்கள் தங்களோடு வாழும் யூதர்களோடு உரையாடல் செய்வதற்கான வாய்ப்பை மதிக்கிறார்கள். உறுதியான உரையாடலுக்கு நம்பிக்கை இன்றியமையாத கூறாகும். கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்குமிடையே உண்மையான மற்றும் நிலைத்த ஒப்புரவு ஏற்படுவதற்கு கத்தோலிக்கத் திருச்சபை இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் பாதையில் தன்னை அர்ப்பணித்துள்ளது. இவ்விரு சமயங்களுக்கிடையேயான உறவு மதிப்பு மற்றும் புரிந்து கொள்ளுதலில் எதிர்காலத்தில் வளரும் என்ற தனது நம்பிக்கையை தெரிவித்து இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.