2009-05-12 15:09:55

இஸ்ரேல் அரசுத் தலைவர் மாளிகையில் திருத்தந்தையின் உரை


மே12,2009. இந்தப் புனித இடங்களுக்கான எனது திருப்பயணம் மத்திய கிழக்கு மற்றும் மனித சமுதாயம் முழுமைக்கும் ஒற்றுமை மற்றும் அமைதி எனும் விலைமதிப்பில்லாக் கொடை கிடைப்பதற்கானச் செபமாக இருக்கின்றது. இப்பகுதி முழுவதற்கும் நீதியின் அடிப்படையில் பிறக்கும் அமைதி கிடைக்க வேண்டும் என்பதே எனது அன்றாட செபமும் ஆகும். அமைதி கடவுளின் கொடை. ஏனெனில் இதனை எல்லாம்வல்ல இறைவன் மனித சமுதாயத்திற்கு அளிப்பதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். எனதன்பு நண்பர்களே, எருசலேம், யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் ஆகியோரின் நகரமாக இருப்பதால் அமைதியான நல்லிணக்க வாழ்வுக்கு அனைவரும் சேர்ந்து சான்று பகர வேண்டும். அமைதிக்கான முயற்சியில் பல்சமய உரையாடல் மிகவும் முக்கியம். உலகத்திற்கான கடவுளின் திட்டத்தில் பாதுகாப்பும் ஒருங்கமைவும் அமைதியும் ஒன்றையொன்று பிரிக்க முடியாதவை. இந்த விழுமியங்களைப் பாதுகாத்து ஊக்குவிப்பதற்கான ஒரே வழி இவற்றை செயல்படுத்துவதாகும். இவற்றை வாழ்வாக்குவதாகும். இந்தப் பணியிலிருந்து யாருக்கும் விதிவிலக்குக் கிடையாது. நீதிக்காக, அமைதிக்காக, மாண்புகள் மதிக்கப்படுவதற்காக, உணர்வற்ற வன்முறைகளும் வெளிப்புற அச்சுறுத்தல்களும் இல்லாத பயமற்ற வாழ்வுக்காக தினமும் ஏங்கும் மக்களின் குரல் கேட்கின்றது. மன்னிக்கும் பண்பினால் இவர்கள் ஏங்கும் இந்த வாழ்வு கிடைக்கும் என்று சொல்லி அரசுத் தலைவர் மாளிகையில் ஆற்றிய இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.