2009-05-10 09:01:02

நம் திருத்தந்தையின் மே 9ந்தேதி திருப்பயண நிகழ்வுகள்


நம் திருத்தந்தையின் மே 9ந்தேதி திருப்பயண நிகழ்வுகள் மோயீசனின் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடைய நெபோ மலையிலிருந்து துவங்கின. இந்த மலையிலிருந்துதான், வாக்களிக்கப்பட்ட பூமியை இறுதியாகப் பார்த்தார் மோயீசன். 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த "மோயீசன் பசிலிக்கா" வும் இப்பகுதியில் உள்ளது. இங்கு சனிக்கிழமை காலை ஏறத்தாழ 30 நிமிடங்களைச் செலவிட்டு புனித தலங்களைத் தரிசித்த பாப்பிறை, நெபோ மலையிலிருந்து 19 கிலொ மீட்டர்கள் தொலைவிலுள்ள மேதபா என்றழைக்கப்படும் நகருக்குச் சென்றார்.

எண்ணாகமம் 21ம் அதிகாரம் 30ம் வசனத்தில் கூறப்படும் நகரே இந்த மேதபா. இந்நகரில் குறைந்தபட்சம் 4500 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். முதல் நூற்றாண்டிலிருந்தே இங்கு கிறிஸ்தவர்கள் உள்ளனர். இந்நகரில் ஒரு பல்கலைக்கழகத்தைக் கட்ட திட்டமிட்டுள்ளது யெருசலேமின் லத்தீன் ரீதி பேராயம். இப்பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல்லை ஆசீர்வதிக்கவே அங்குச் சென்றார் திருத்தந்தை.

மேதபா நகரில் நிகழ்ச்சியை முடித்தபின், அங்கிருந்து 38 கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள Al Hussain Bin Talal மசூதிக்குப் பயணம் மேற்கொண்டார் பாப்பிறை. இந்த மசூதி தற்போதைய மன்னர் இரண்டாம் அப்துல்லாவால் அவரின் தந்தையின் நினைவாகக் கட்டப்பட்டு 2006ம் ஆண்டு ஏப்ரல் 12ல் திறக்கப்பட்டது. ஆறாயிரம் பேர் வழிபடக்கூடிய வசதியுடைய பெரிய மசூதி இது. இதன் அருகேயுள்ள, மன்னர்களின் தலைமுறை வரலாறுகளைக் கொண்டிருக்கும் Hashemita அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார் பாப்பிறை.

இம்மசூதியுள்ள வளாகத்தில்தான் இஸ்லாமியத்தலைவர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள், ஜோர்டன் பல்கலைக்கழகங்களின் முதல்வர்கள் ஆகியோரைச் சந்தித்தார் பாப்பிறை. மன்னரின் உறவினரான இளவரசர் Ghazi Bin Talal இங்கு திருத்தந்தையை வரவேற்றார். அங்கு குழுமியிருந்தோருக்கு ஓர் உரை வழங்கிய பின் அம்மனின் திருப்பீடத்தூதரகம் வந்து மதிய உணவருந்தினார் பாப்பிறை.

சனி மாலை உள்ளூர் நேரம் 5.30 மணிக்கு அம்மனின் புனித ஜார்ஜ் பேராலயத்தில் குருக்கள், துறவியர், குருமடமாணவர்கள் மற்றும் திருச்சபை இயக்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்தார் பாப்பிறை.

மேலேக் கூறப்பட்டுள்ள நான்கும், சனிக்கிழமை மே 9ல் திருத்தந்தை ஜோர்டன் தலைநகர் அம்மனில் கலந்துகொண்ட முக்கிய நிகழ்வுகள்.








All the contents on this site are copyrighted ©.