2009-05-06 15:04:22

இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு ஐ.நா.வலியுறுத்தல்


மே06,2009. இலங்கையில் அப்பாவி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கனரக ஆயுதங்கள் பயன்படுத்துவதையும் போர்ப் பகுதிகளுக்கு அத்தியாவசிமாய்த் தேவைப்படுகின்ற நிவாரண உதவிகள் அனுப்பப்படுவதற்கு உதவியாகத் தமிழ்ப் போராளிகளின் மீதான தாக்குதல்களையும் நிறுத்துமாறு ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார்.

மனிதாபிமான போர் நிறுத்தம் இடம் பெற வேண்டும் என்று சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரித்து வரும் வேளை, இச்செவ்வாய் இரவு இலங்கை அதிபரிடம் தொலைபேசியில் இவ்விண்ணப்பத்தை முன்வைத்தார் பான் கி மூன்.

அப்பாவி மக்களையும் சர்வதேச சட்டங்களையும் பாதுகாப்பதற்குப் போரிடும் தரப்புகள் முக்கியத்துவம் கொடுக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டதாக நியுயார்க்கில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும், மோதல் நடக்கும் பகுதிகளில் இருந்து தப்பியோடி வரும் மக்களின் உடனடி மனிதாபிமானத் தேவைகளுக்காக 5 கோடி டாலரை அவசர உதவியாகக் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் நிறுவனம்.

வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணப் பகுதிகளிலுள்ள அரசின் முகாம்களில் வாழும் சுமார் 2 இலட்சம் புலம் பெயர்ந்த மக்களுக்கு இவ்வுதவி தேவைப்படுவதாக இலங்கை அரசு கூறியது.








All the contents on this site are copyrighted ©.