2009-04-28 12:52:01

விவிலியத் தேடல் – உவமைகள் . 28-04-09 .


விவிலியத் தேடல் – உவமைகள் . 28-04-09 .

தூய மத்தேயு நற்செய்தி 7 , 21-27 .

நற்செய்தியின் முக்கியமான , முதலாவதும் கடைசியானதுமாக இந்த அறிவுரை தரப்படுகிறது .



எந்த ஒரு கிறிஸ்தவ வாழ்வும் கிறிஸ்துவின் மீது ஆழமான பற்றுக் கொண்டிருந்தால் சிந்தையிலும் செயலிலும் இயேசுக் கிறிஸ்து நிலையாக இருக்கவேண்டும் . சிலர் எப்படியும் , எளிதான , மனதுக்குப் பிடித்தமான முறையில் வாழலாம் என நினைக்கலாம் . எல்லாம் நலமாகப் போய்க்கொண்டிருக்கும்போது எல்லாம் எளிதாதச் சுகமாகத் தெரியலாம். ஆனால் வெள்ளம் வருவதுபோல சோதனைகள் வரும்போது , உணர்ச்சிகள் எரிமலையாக வெடிக்கும்போது கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருக்கவேண்டும் என்றால் நாம் இறைவன் காட்டும் வழியில் முன்னரே வாழ்ந்து பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும் . கோவிலுக்குச் சென்றால் மட்டும் போதாது . உறுதியாகக் கடவுள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வாழவேண்டும் . சுயநலம் கொண்ட இருவரின் நட்பும் உறவும் நெடுநாள் நீடிக்காது. திருமண உறவுகளில் கைப்பிடித்தவரை மதித்து , அவருக்கு எந்நாளும் பிரமாணிக்கமாக இருக்காவிடில் , உடல் அழகையோ, பணத்தையோ மட்டும் நம்பி மணவாழ்க்கையில் நுழையும் திருமணங்கள் நிலைப்பதில்லை . அதேபோல சமய வாழ்க்கையும் அர்த்தமுள்ளமுறையில் வாழப்படவேண்டும் . சம்பிரதாயங்களிலும் , ஆசாரங்களிலும் , கடமைக்காக பங்கேற்கும் வழிபாடுகளிலும் உண்மையற்றமுறையில் வாழ்கின்றவர்கள் உண்மையான கடவுள் பக்தர்கள் அல்லர் .



ஆண்டவரே , ஆண்டவரே எனச் சொன்னால் மட்டும் போதாது . கடவுளுடைய விருப்பப்படி நாம் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள்வேண்டும் . இயேசு நேரிடியாக , தெளிவாகச் சொல்லிவிடுகிறார் . வாழ்க்கையின் பயணத்தில் கடவுளுடைய விருப்பத்தை எல்லாச் சமயத்திலும் நாம் பின்பற்றவேண்டும் . நம் பேச்சிலும் மூச்சிலும் , வாழ்வின் எல்லா நிலையிலும் இயேசு நம்மை ஆட்கொண்டு வழிநடத்தவேண்டும் .



இரண்டு நபர்கள் ஆற்றோரமாக வீடு கட்டுகிறார்கள் . ஒருவர் ஆழமாக வாணம் பறித்து கீழை பாறை இருக்கும் அளவுக்குத் தோண்டி தம் வீட்டுக்கு அடித்தளம் இடுகிறார் . மற்றவர் மேலெழுந்த வாரியாக மணல்பாங்கான இடத்தில் அடித்தளமிடுகிறார் . மழைக்காலத்தில் வெள்ளம் வரும்போது மணல்மீது அடித்தளமிடப்பட்ட வீடு வீழ்ந்துவிடுகிறது .

ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது வீடு கட்டுவதைப் போன்றது. நம்முடைய ஒவ்வொரு எண்ணமும் கற்களாக நம் வீட்டுக்கு உறுதி அளிக்கின்றன . நம்முடைய பழக்கங்கள் தேக்கு மரத் தடிகளாக , உத்திரமாக வீட்டுக்கு அமைகின்றன . நம்முடைய கற்பனைகள் சரியாகவோ , கோணலாகவோ அமைக்கப்பட்ட சன்னல்களாக இருந்துவிடுகின்றன . இவையெல்லாம் இணைந்து , ஒன்றுபட்டு வீடாக அமைகின்றன . வீடு கட்டும் இருவருள் ஒருவர் வருங்காலத்தை மனதில் கொண்டு சிறப்பாக வீட்டைக் கட்டுகிறார் . மற்றவர் கெட்டவர் அல்லர் , ஆனால் சரியாகத் திட்டமிடாது , ஏனோதானோ என்ற முறையில் வீட்டைக் கட்டிவிடுகிறார் . அதேபோல வாழ்க்கையையும் சிலர் தெய்வபயத்தோடும், மற்றும் சிலர் சரியாகச் சோதனையிடாதமுறையிலும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுகிறார்கள் .

இவைபற்றித் தீர்ப்புக்கூறத் தகுதியுள்ள கடவுள் திருமகனாகிய இயேசுபிரான் தம் வார்த்தைகளைக்கேட்டு அதன்படி நடப்பவர்களே தம்முடைய உண்மையான பக்தர்கள் என்கிறார் . இந்த அளவுகோல்படிதான் உலகம் தீர்ப்பிடப்படும் . இயேசு தொங்கிய சிலுவையில் இரண்டு மரங்கள் இருக்கின்றன . ஒன்று மேல் நோக்கிச் செல்கிறது . மற்றது குறுக்காக நிற்கிறது . மேலே செல்லும் மரம்போல நாமும் கடவுளோடு நல்லுறவு கொள்ளவேண்டும் . குறுக்குமரம்போல மனிதர்களோடும் நம் உறவுகள் நலமாக அமையவேண்டும் . கிறிஸ்துவோ நம் வாழ்வுக்கு அடித்தளம் . சிந்திக்கத் தெரிந்தவர்கள் இயேசு கூறும் உண்மைகளை நன்கு ஆழமாக உணர்ந்து அந்த அடித்தளத்தில தம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர்கள் . அறிவிலிகளோ மேலெழுந்தவாரியாக முலாம் பூசுவது போன்றும் நாடகத்தில் வேஷம் போடுவதுபோல வாழ்க்கையிலும் பொய்த்தோற்றத்தோடு நடித்துக் கொண்டு கிறிஸ்துவின் மீது அடித்தளமில்லாது வாழும்போது அந்த வாழ்க்கை மணல்மீது கட்டப்படும் வீட்டுக்கு ஒப்பாக இருக்கும் . கிறிஸ்துவின் மொழிகேட்டு அதனை வாழ்வாக்குகின்றவர்களுக்கு கிறிஸ்துவே வீட்டைக் கட்ட ஓடோடிவந்து உதவுகிறார் .



ஒரு கோடீஸ்வரர் மிகச் சிறந்த வீட்டைக் கட்டுவதற்குத் திட்டமிட்டு அதனை மேற்பார்வையிட ஒரு கட்டடப் பொறியாளரை நியமித்தார் . தேவையான அளவுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்தார் . வீட்டைக் கட்டிமுடித்ததும் அந்தக் கட்டடப் பொறியாளரிடம் அந்த வீட்டை உமக்கே வைத்துக்கொள்ளும் என்றும் , நீர் அதில் வாழவேண்டும் எனவும் கூறிவிட்டார் . அப்பொழுதுதான் அந்த வீட்டில் இருந்த குறைபாடுகள் அந்தப் பொறியாளருக்கு வெளிச்சமாகத் தெரிந்தன . இன்னும் சிறப்பாகக் கட்டியிருக்கலாமே என அப்போது தான் எண்ணத் தொடங்கினார் . அவரைப் போல நாமும் நாம் கட்டி எழுப்பும் மாளிகையில் வாழவேண்டும் .

எல்லா வீடுகளும் சோதனையிடப்படும் . கோடைகாலம் நிலைத்திராது . பருவங்கள் மாறும் . மழையும் காற்றும் புயலும் வரும் . மனிதர்களில் எவரும் சோதனைகளிலிருந்தும் துன்பத்திலிருந்தும் பொறுப்புக்களிலிருந்தும் தப்பிக்கமுடியாது . சரியாகக் கட்டப்படாத வீடுகள் தரைமட்டமாக வீழும் என நமக்கு இன்று தீர்ப்புக் கூறுவது இயேசு . வாழ்க்கையில் தப்புத்தாளம் போடலாம் , எனத் தீய வழிகளில் வாழ்பவர்களுக்கு இயேசு எச்சரிக்கை விடுக்கிறார் . ஆனால் நல்லவர்கள் , ஞானமுள்ளவர்கள் நல்ல வீடுகட்டி , பிறருக்கும் துன்பவேளையில் அடைக்கலமாக இருக்கிறார்கள் .



 








All the contents on this site are copyrighted ©.