2009-04-28 14:59:15

லாக்குய்லா நகர்ப் பகுதியில் திருத்தந்தை


ஏப்.28,2009. இம்மாதம் ஆறாம் தேதி நிலஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட இத்தாலியின் லாக்குய்லா பகுதிக்கு இச்செவ்வாயன்று பயணம் மேற்கொண்ட திருத்தந்தை அப்பகுதி மக்களை நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

லாக்குய்லா நகருக்குப் புறநகர் பகுதியிலுள்ள ஒன்னா என்ற கிராமத்திற்குச் சென்ற திருத்தந்தை, இடிபாடுகளைப் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் இக்கிராமம் மட்டுமல்ல அப்பகுதி முழுவதும் மீண்டும் பிறப்பெடுக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார். ஒன்னா கிராமத்தில் மட்டும் 40 பேர் இறந்துள்ளனர்.

நிலஅதிர்ச்சியால் துன்புறும் மக்கள் ஒவ்வொருவரையும் அரவணைத்து ஆறுதல்கூற விரும்புவதாகக் கூறிய அவர், அவர்களின் துன்பங்களில் திருச்சபையும் பங்கேற்கிறது என்றார்.

லாக்குய்லா நகருக்குச் செல்லும் வழியில் சாந்தா மரியா தி கொல்லெமாஜ்ஜோவின் இடிந்த பேராலயத்தையும் பார்வையிட்டார் பாப்பிறை.

பல மாணவ மாணவியரின் உயிரிழப்புக்கும் காரணமான மாணவர் தங்கும் விடுதியையும் பார்வையிட்ட பாப்பிறை, இப்பகுதியில் இடர்துடைப்புப் பணியாற்றி வரும் சுயவிருப்பப் பணியாளர்கள் மற்றும் அரசுப் பணியாளர் அமைப்புகள் ஆகியவைகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

அஅப்ருஸ்ஸோ மாகாணத்தில் ஏற்பட்ட இந்நிடுக்கத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் 296 பேர் இறந்துள்ளனர். சுமார் 50,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதமாகியுள்ளன. பல கட்டிடங்களின் சேதத்திற்கு அவற்றின் கட்டுமானப் பணிகளைக் குறை சொல்லி விசாரணைகளும் இடம் பெற்று வருகின்றன. சிமெண்டில் கடல்மண் கலக்கப்பட்டதாகக் குறைசாட்டப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.