2009-04-24 17:55:02

இனப்படு கொலை வன்னிப்பகுதியை பிணக்காடாக்குகிறது என்கிறார் பேராயர்.240409 .


தமிழ் விடுதலைப் புலிகளை சூழ்ந்து கொண்டிருப்பதாக இலங்கையின் இராணுவம் கூறிக் கொண்டிருப்பதாலும் மட்டுமீறி அப்பாவி மக்களையும் தாக்கி வருவதாலும் ஓர் இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் போர்க்களத்தை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன . முகாம்களை விட்டும் வெளியேறும் அம்மக்கள் பெருந்துயர்த்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள் எனவும் தெரிகிறது . போர் நடக்கும் பகுதியில் ராணுவத்தாக்குதலால் நாளும் பெருமளவு மக்கள் இறந்தும் காயப்பட்டும் துன்புறும் நிலை உருவாகியுள்ளது . உடனடியாகப் போரை நிறுத்துமாறு ஐநா ஆணையிட்டும் இலங்கை அரசு ஐநாவின் வேண்டுகோளை நிராகரித்துள்ளது . மக்களுக்குத் தொண்டு நிறுவனங்களின் உதவியும் தடை செய்யப்பட்டுள்ளது . செய்தி நிருபர்களுக்குப் போர் பற்றிய உண்மை நிலவரத்தை அரசு இருட்டடிப்புச் செய்துள்ளது . வன்னிப்பகுதியில் அரசு நடத்திய தாக்குதலில் அருள்தந்தை டீஆர் வசந்த சீலனின் கால்கள் படுகாயமடைந்துள்ளன . ஒரு கால் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது . மேலும் ஒரு தந்தை ஜேம்ஸ் பத்திநாதனும் காயப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாகத் தெரிகிறது . இலங்கை அரசின் இந்த வன்முறைத் தாக்குதல் தமிழர் பகுதியை பிணக்காடாக ஆக்கியுள்ளது என்றும் , இந்த இனப்படுகொலையை எந்தக் காரணமும் நீதிப்படுத்த முடியாது என்றும் சென்னைப் பேராயர் சின்னப்பா தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.