2009-04-21 17:01:26

விவிலியத் தேடல் . இறுதித் தீர்ப்பு பற்றிய உவமை .

நற்செய்தி வாசகம் திருத்தூதர் மத்தேயு 25 , 31- 46 . 210409 .


விவிலியத் தேடல் . இறுதித் தீர்ப்பு பற்றிய உவமை .

நற்செய்தி வாசகம் திருத்தூதர் மத்தேயு 25 , 31- 46 . 210409 .

நாம் இன்று வாசிக்கக் கேட்ட நற்செய்தியில் இயேசு மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு வழங்குவது பற்றிக் கேட்டோம் .

விவிலியத் தேடலில் நாம் இயேசுவின் கருத்துக் கதைகள் பற்றிப் பார்த்து வருகிறோம் . இவற்றிற்கு உவமைகள் என்றொரு பெயர் உண்டு . உவமைகள் என்பன நமக்கு ஒரு கதையைத் தருகின்றவை . அவை இன்றைய வாசகத்தில் வருவதுபோல ஓர் உண்மையான கருத்துக் கதையாகவோ , அல்லது ஊதாரி மைந்தன் , நல்ல சமாரித்தர் கதைபோல கற்பனைக் கதையாகவோ இருக்கலாம் . இக் கதைகள் நமக்கு ஒரு நன்னெறியையோ , மதத்தைச் சார்ந்த உண்மையையோ முன் வைக்கலாம் .

இயேசு கூறும் கதைகளில் கருத்து நமக்கு நேரிடையாகத் தெளிவாக வழங்கப்படுகின்றன . இயேசு கூறியவற்றை யாரும் உடனடியாக எழுதி வைக்கவில்லை . பல ஆண்டுகளுக்குப் பின்னர் நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டபோது இயேசு கூறிய வார்த்தைகளை அவர் கூறியவாறே எழுதுவது என்பதும் இயலாதது . இயேசு கூறிய கதைகளின் கருத்துக்கள் , அவர் கூறிய கருத்துக்களின் உட்பொருள் ஆகியன தவறாது நமக்குக் கிடைக்க வாய்ப்பு உள்ளது . இயேசுவின் உவமைகளில் வரும் கருத்தை காலமோ , தூரமோ அழிக்க முடியாது . இவர் பேசியது போல வேறு எவரும் பேசியதில்லை எனக் கூறும் அளவுக்கு இயேசுவின் கருத்துக்கள் கேட்பவரைப் பிணிக்கும் தன்மை உவமைகளில் அழியாது காக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம் . கதைகளில் வரும் கருத்துக்கள் நெஞ்சில் அழியாது இருக்குமாறு இயேசு அவற்றைக் கதை வழி வழங்கியிருக்கிறார் . இயேசுவின் உவமைகளில் உயிர்த்துடிப்பு உள்ளதை நாம் காண்கிறோம் .

நாம் இன்றைய இறுதித் தீர்ப்பு உவமையில் கதையை அல்ல ஆனால் உண்மையில் நிகழவிருப்பதை கதைவழி காண உள்ளோம் . நற்செய்தியில் வரும் இறைவாக்குகளில் இன்றைய உவமை நடக்க இருக்கும் முக்கியமான நிகழ்வைப் பற்றிய உண்மையை நமக்குத் தருகிறது . நற்செய்தியும் மிக அருமையாக எழுதப்பட்டிருக்கிறது . எபிரேயக் கவிதை நயம் சொட்டுவதைக் காண்கிறோம் . இன்றைய உவமையைவிட மிக நயமான பொருள் பொதிந்த வேறு பகுதிகளையோ , அருமையான சொல்நடையையோ நாம் விவிலியத்தில் காணமுடியாது . இயேசு கூறிய அமுத மொழியினைப் பிரதிபலிப்பதாக இன்றைய உவமை உள்ளது . இங்கு இயேசு அரசர் மட்டுமல்ல , மகிமை நிறைந்த கடவுளின் திருமகனாக வருகிறார் . வானதூதர்கள் புடைசூழ வருகிறார் . உலகின் எல்லா நாடுகளும் அவருடைய நீதி அரியணையின் முன்னர் இருக்கின்றன . வெள்ளாடுகளும் செம்மறியாடுகளும் இடதுபுறமும் வலதுபுறமும் நிறுத்தப்படுவது போல நல்லோரும் தீயோரும் பிரிக்கப்படுகின்றனர் . கிறிஸ்துவே நீதித் தேவனாக வரவுள்ளார் . அவர் உள்ளங்களை நன்கு அறிவார் . மனிதர்கள் அவர்கள் கடைப்பிடித்த மதங்களைப் பற்றியோ , வணங்கிய தெய்வங்களைப் பற்றியோ , வாழ்வில் சமுதாயத்தில் இருந்த கல்வியறிவு , பட்டம் பதவி போன்ற நிலைகள் பற்றியோ கேள்விகள் கேட்கப்படமாட்டார்கள் . கேட்கப்படுவதெல்லாம் ஏழைகளுக்கு உதவினீர்களா , அனாதைகளை ஆதரித்தீர்களா , சிறைப்பட்டோரைச் சந்தித்தீர்களா . பசியுற்றோர் , தாகமுற்றோர் , வீடில்லாதோர் , துன்புற்றோர் இங்கு நல்லோர் செய்த அறத்தை அளக்கும் அளவுகோலாக இருக்கின்றனர் .

நாம் அவர்களுக்கு என்ன செய்தோம் , அல்லது செய்யத் தவறினோம் என்பன நமக்கு நன்மைக்கோ தீமைக்கோ தீர்ப்பளிப்பதாக இருக்கும் . நமக்குத் தரப்பட்ட பட்டியலில் உள்ள துன்புறுவோர் நம்முடைய இரக்கத்தைச் சிந்தையிலும் , செயலிலும் பெறத் தகுதியுடையவர்கள் . அவர்கள் நம்முடைய தியாகத்தை எதிர்நோக்குகிறார்கள் . அவர்களால் நமக்குப் பிரதி பலன் தரமுடியாது . கடவுள் நமக்குத் தரும் தூண்டுதலுக்கு ஏற்ப நாம் அன்பைக் காட்ட அழைக்கப்படுகிறோம் .



நாம் இதுபற்றிச் சிந்திக்கும்போது பல கேள்விகள் எழும்புகின்றன. கிறிஸ்துவ வாழ்வு முழுவதும் பிறர்நலம் பேணுவது மட்டும்தானா . இல்லை . ஆனால் அப்படிப்பட்ட பிறரன்பு நாம் கடவுள்மீது கொண்டிருக்கும் அன்பைப் பிரதிபலிப்பதாக உள்ளது . அவ்வாறு நாம் அன்பு காட்டத் தவறும்போது நம்முடைய இறை பக்தி உயிரற்று இறந்துபோய்விடக்கூடியதாக இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும் . தனிப்பட்ட ஒருவரின் பிறரன்பு போதுமா. போதாது . பாவச்சூழலில் மக்களை அவதியுறச் செய்யும் சமுதாயச் சீர்கேடுகளை, சமுதாய அமைப்புக்களை நாம் மாற்ற முயலவேண்டும். ஆனால் நாம் பொதுநலத் தொண்டை ஆற்றுவதற்கு முன்னர் தனிப்பட்டமுறையில் பிறருக்கு உதவிபுரிவதைத் தொடரவேண்டும் . அப்படியென்றால் செபம் தேவையில்லையா . செபம் தவிர்க்கமுடியாதது . செபத்தின் வழியாகவே நாம் இறையருளைப் பெறமுடியும் . இறையருளே நம்மை அன்பைப் பகிர்ந்து கொள்ளத் தூண்டமுடியும் . நேர்மையான வாழ்வு முக்கியமில்லையா . கண்டிப்பாக நேர்மையான வாழ்வு அவசியம் தேவை .வாழ்வில் நேர்மையில்லாது அறச்செயல் செய்வது நல்லவராக வேடம் தரித்து கபட நாடகமாடுவதாகும் . இறைப்பற்று இல்லாது பிறரன்புச் சேவை செய்தால் போதுமா . இறைபற்றும் கடவுள் பக்தியும் மிகமுக்கியமானவை. இறை நம்பிக்கையிலிருந்துதான் அன்பு பொங்கி வருகிறது . மனிதர்கள் அன்பு செய்யப்படத் தகுதியுள்ளவர்கள் என்பது இறை நம்பிக்கையிலிருந்துதான் வருகிறது . கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்பதும் , நாம் பிறரை அன்பு செய்ய அவரால் அழைக்கப்படுகிறோம் என்பதும் இறை நம்பிக்கையால் வருவதாகும் . மேலும் கிறிஸ்துவே நீதி நடுவராக இருப்பார் . தீர்ப்பிடுவதையும் அன்பு செய்வதையும் அவர் நன்கு அறிவாரல்லவா .



எனவே கேள்விகளுக்கு நாம் நம் மனிதாபிமான முறையில் பதில் கூறலாம். ஆனால் பரீட்சையில் நாம் தேர்ச்சி பெறவேண்டும் .

மீரியமுடைய கல்வி என்றதொரு நாவலை வில்லியம் என்பவர் எழுதியுள்ளார் . கதையில் திருமதி ஜோல் என்பவர் தலையை வாரிக்கொள்ளாத , சண்டைபோடக்கூடிய , பேச்சிலும் நடத்தையிலும் இதமில்லாதவராக இருந்தாலும் வறியோருக்கும் தேவையுறுவோருக்கும் எப்பொழுதும் உதவிசெய்யத் தயாராக இருப்பார் . நாவலாசியர் கூறுகிறார் திருமதியிட ஜோலிடம் தேவையானதொன்று இருந்தது . இறுதித் தீர்ப்பு நாள் என ஒன்றிருந்தால் அவரை நடுவரின் வலது புறத்தில் நிறுத்தி வைக்கும் என்கிறார் . அதே சமயம் அறிஞர்கள் , அறிவியலார் , சமயப்பற்றுடையோர் , வாழ்வில் செல்வந்தர் போன்றவர்கள் நடுவரின் இடது புறமாக நிற்கவேண்டும் என்றும் முடிவி்ல்லாத காலத்துக்கும் தண்டனைத் தீர்ப்பை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறுகிறார் . நாவலாசிரியரின் தீர்ப்பு நாம் இன்று பார்க்கும் உவமைப்படி பிறரன்பில் அடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது .

எதுவாயினும் கடவுள் தண்டிப்பதற்காகக் காத்திருக்கும் அன்பற்றவர் அல்லர் . நம்மைக் காப்பதற்கே கடவுள் தம் ஒரே திருமகனை இவ்வுலகுக்கு அனுப்பினார் . அவரும் சிலுவைச் சாவை ஏற்றுக் கொண்டார் . எனவே அளவு கடந்த அன்புகாட்டும் கடவுள் நம்மையெல்லாம் வான்வீட்டுக்கு வருகவென்று அழைக்கவே காத்திருக்கிறார் என்பதும் , வாழ்வில் நாம் நல்ல உள்ளத்தோடு வாழக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதும் உவமை தரும் பாடங்களாகும் .








All the contents on this site are copyrighted ©.