2009-04-21 15:41:55

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கியூபா குறித்த அமெரிக்க அரசுக் கொள்கைகளை வரவேற்றுள்ளனர்


ஏப்.21,2009. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பராக் ஒபாமா கியூபா நாடு குறித்த அரசுக் கொள்கைகளில் நல்மாற்றங்களைக் கொணர்ந்துள்ளதை வரவேற்றுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள், குடிபெயர்வோர் பிரச்சனையின் மூல காரணத்தை ஆராய மெக்சிகோ அரசுத்தலைவருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.

கியூபாவிற்கு எதிரான அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தடைகளைத் தளர்த்த வேண்டுமென ஏற்கனவே பலமுறை தாங்கள் அழைப்புவிடுத்திருந்ததையும் சுட்டிக்காட்டிய அந்நாட்டு ஆயர்கள், கியூபாவிற்கு எதிரான இத்தனை ஆண்டு கட்டுப்பாடுகளின் மூலம் கியூபாவில் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் மதிப்பு போன்றவைகளுக்கு உதவ முடிந்ததில்லை என்பதையும் தங்கள் கடிதத்தில் எடுத்துரைத்துள்ளனர்.

கியூப நாட்டுடனான அமெரிக்க ஐக்கிய நாட்டின் உறவுகளைக் குறைப்பதன் மூலம் அல்ல, மாறாக அதிகரிப்பதன் மூலமே அந்நாட்டின் மனித உரிமைகள் மதிக்கப்படுவதற்கு சேவையாற்ற முடியும் எனவும் ஆயர்கள் கூறியுள்ளனர்.

மெக்சிகோவிலிருந்து பணியாளர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு குடிபெயர்வதால் இருநாடுகளும் அதனால் பயன்பெறுகின்றன, ஆனால் இங்கு சுரண்டப்படுவது குடியேற்றதாரர்களே என்ற கவலையும் ஆயர்களால் வெளியிடப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.