2009-04-20 14:45:31

ஏப்ரல் 23 உலக புத்தக தினம்


ஏப்ரல்20,2009. பெங்களூரில் பத்து நிறுவனங்களுக்கு இயக்குனராக இருப்பவர் யக்னேஸ்வரன். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வணிகயியலில் இளங்கலை படிப்பு படித்த இவர், அஞ்சல்வழி கல்வி வழியாக 25 பட்டங்களும் 13 பட்டயங்களும் வாங்கியிருப்பவர். இந்திராகாந்தி பல்கலைகழகத்தில் 19 கட்டுரைகள் சமர்ப்பித்து எம்.பி.ஏ கல்வியும் முடித்திருப்பவர். குழந்தை பராமரிப்புக் கல்வியிலும் கூட்டுறவு மேலாண்மையிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றிருப்பவர். இதுவரை தனது எல்லாப் படிப்புகளிலும் 67 விழுக்காட்டுக்குக் குறைவான மதிப்பெண்கள் பெறவில்லை என்று சொல்கிறார். 62 வயதைக் கடந்துள்ள இவர், இத்தனைக்கும் ஓர் ஏழைக் குடும்பத்து வாரிசுதான். இவ்வளவு பட்டங்களும் பட்டயங்களும் எப்படி சாத்தியமானது என்று கேட்டால், ஓயாத வாசிப்பு, அயராத உழைப்பு என்று சொல்கிறாராம். ஸ்ரீ இராம கிருஷ்ணர் சொல்வாராம் : தான் கற்ற நூல்களின் அளவுதான் ஒருவனிடம் நுட்பமான அறிவு பொருந்தியிருக்கும் என்று. ஆம். நிறையப் படிக்கின்ற போது நமது அறியாமையை நாம் தெரிந்து கொள்ளலாம்.

“நீ வாசிக்கும் புத்தகம் எது என்று சொல், நீ யார் என்று சொல்கிறேன்” என்று பொதுவாகச் சொல்லும் வழக்கம் உண்டு. புத்தகங்களைப் பொறுத்தவரையில் அவை உற்ற தோழர்கள், இதயத் துடிப்புள்ள இன்னோர் உயிர். புத்தகம் என்பது நாம் துளிர் விடுகின்ற வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கிறது என்று எழுத்தாளர் இறையன்பு சொன்னார். மக்களில் எழுத்தறிவு வளர வளர, அவர்களில் வாசிக்கும் திறமையும் அதிகரித்து வருகிறது. இந்த இத்தாலி நாட்டில் இரயிலிலோ விமானத்திலோ பேரூந்திலோ மக்கள் ஏறியவுடன் அருகில் இருப்பவர்களிடம் பேச்சு கொடுக்கிறார்களோ இல்லையோ, ஆனால் முதல் வேலையாகப் புத்தகங்களை விரித்து விடுவார்கள். மக்கள், புத்தகங்கள் படிப்பதை ஊக்குவி்க்கவும், குறிப்பாக இளைய தலைமுறை மத்தியில் படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் ஐ.நாவின் யுனெஸ்கோ நிறுவனத்தின் முயற்சியால் “உலக புத்தகம் மற்றும் காப்புரிமை” தினம் உருவாக்கப்பட்டு அது ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ம் தேதியன்று கடைபிடிக்கப்பட்டும் வருகிறது. இத்தினத்தை உலகம் முழுவதும் நூலகங்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக வாசிப்பில் தீவிர ஆர்வம் கொண்டவர்கள் என அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.

“உலக புத்தகம் மற்றும் காப்புரிமை” தினம் ஏப்ரல் 23ம் தேதியன்று கடைபிடிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் மிகைல் தெ சொ்வான்தெஸ் சாவேத்ரா. ஸ்பானிய புதின எழுத்தாளரும், கவிஞரும், நாடகாசிரியருமான இவர், ஸ்பானிய இலக்கியம் மட்டுமின்றி உலக இலக்கியத்தில் முக்கியத்துவமான இடத்தைப் பெற்றவர். அவரது “டான் குய்ஜோட் Don Quijote என்கிற புனைவானது, வரலாறு மற்றும் இன்றைய புதியவகைப் புனைவுகளுக்கு அடிப்படையான பார்வையை தந்த ஒரு படைப்பிலக்கியமாகும். இப்புனைவே மேலை நாடுகளின் நாவல் வடிவத்தின் முன்னோடியாகும். இவரது உருவம் ஸ்பெயினின் ஈரோ நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இவர் 1616ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி, மத்ரித்தில் இறந்தார்.



இவ்விருவரில் இன்னொருவர் ஆங்கில நாடக எழுத்தாளரும், கவிதையாசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவராவார். இவர் ஆங்கில இலக்கிய உலகில் ஒரு சிறந்த நாடக ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் போற்றப்படுகின்றார். 38 நாடகங்களை எழுதியுள்ள இவரும் 1616ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதிதான் இறந்தார். இவ்விருவரது நினைவு தினமும் இன்று ஒரே நாளாக இருந்தாலும் அவர்கள் இறந்த சமயத்தில் அப்படி இல்லை. ஆயினும் அக்காலத்தில் ஸ்பெயினில் கடைபிடிக்கப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டியும், இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்ட ஜீலியன் நாட்காட்டியும் 10-நாள் வித்தியாசத்தில் இருந்ததால் இந்நாள் இப்பொழுது ஒரே நாளாக அமைந்துள்ளதாகச் சொல்லப்படுகின்றது. மேலும், Maurice Druon, Haldor K.Laxness, Vladimir Nabokov, Josep Pla, Manuel Mejía Vallejo, Inca Garcilaso de la Vega போன்ற பிரபல எழுத்தாளர்கள் பிறந்த அல்லது இறந்த தினங்களும் ஏப்ரல் 23ம் தேதி வருவதால், யுனெஸ்கோ, இந்நாளை உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினமாக அறிவித்தது. 1995ம் ஆண்டு, சர்வதேச சகிப்புத்தன்மை ஆண்டாகக் கடைபிடிக்கப்பட்ட போது பாரிசில் கூடிய யுனெஸ்கோ பொதுஅவை, வருங்ககாலத் தலைமுறைகளுக்கு சகிப்புத்தன்மைச் செய்தியை நூல்கள், எழுத்தாளர்கள் வடிவில் வழங்கும் நோக்கத்தில் உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினத்தை அனுசரிக்கத் தீர்மானம் நிறைவேற்றியது. எனவே 1995ம் ஆண்டு முதல் “உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

”ஒரு புத்தகம், பல கருத்துக்களின் தொகுதி என்பார்கள். மனிதர்கள் அறிவை இரண்டு மூலங்களில் பெறுகிறார்கள். ஒன்று நேரடி அறிவு. அது அனுபவங்களின் வாயிலாக பெறுவது. மற்றது மறைமுக அறிவு. அது புத்தகங்கள் வாயிலாகப் பெறுவது. புத்தக வாசிப்பு என்பது ஒருவகை இதம் தரும் சுகமாகும். எத்தனையோ புத்தகங்கள் நமது வாழ்வையே புரட்டிப் போட்டுள்ளன. அரசியல், ஆன்மீகம், ஆளுமை, அன்பு, பணம் போன்ற வாழ்க்கையின் பல கூறுகள் பற்றிய அறிவில் தெளிவைத் தருகின்றன. அபிரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, புனித லொயோலா இஞ்ஞாசியார், ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன் போன்றோரின் வாழ்க்கையைப் புத்தகங்கள்தான் மாற்றி இருக்கின்றன. இவர்களுக்குப் புத்தகங்களுக்கு முன் உள்ள வாழ்க்கை, புத்தகத்தைப் படித்தபின் உள்ள வாழ்க்கை என்று இருந்திருக்கிறது. இயேசு சபையை நிறுவிய மாவீரரான புனித இஞ்ஞாசியார், போரில் படுகாயமடைந்து மருத்துவமனையில் இருக்கையில் வாசிப்பதற்காக வீரர்களின் வரலாறுகளைக் கேட்டார். ஆனால் அவருக்குப் புனிதர்களின் வரலாறுகளே கிடைத்தன. அவற்றை வாசித்தார். அரண்மனை வாழ்வைத் துறந்தார். மாபெரும் புனிதராகத் திகழ்கிறார்.

அதேபோல், பாவத்திலே மிதந்த தத்துவ மேதையான புனித அகுஸ்தீன், புனித வனத்து அந்தோணியாரின் வாழ்க்கை வரலாற்றை வாசித்த பின்னர், கி.பி.386ம் ஆண்டில் மனப்போராட்டத்தில் உழன்றார். இவ்வாறு ஆழ்ந்த யோசனையில் ஒருநாள் மிலானில் அவரது தோட்டத்தில் இருந்த போது “எடுத்து வாசி” என்ற ஒரு குழந்தையின் அசரீரி குரலைக் கேட்டார். உடனே தனது அருகில் இருந்த புத்தகமான புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலைத் திறந்தார். “பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்”(13:13-14) என்ற பகுதி அவரது கண்ணில் பட்டது. இதுவே அகுஸ்தீனின் மனமாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று அவரைப் பற்றிய குறிப்புகள் சொல்லுகின்றன.

அமெரிக்க ஐக்கிய நாடு, இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்த போது, இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ் பெயின் (Thomas Paine) என்பவர், அமெரிக்காவுக்குச் சென்று, தன்னுடைய நாட்டு அடிமைத்தனத்தை எதிர்த்துத் common sense என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அதைப் படித்த அமெரிக்க இராணுவத்தினர் இங்கிலாந்தை எதிர்த்துப் போராடினார்கள். எனவே இந்த அமெரிக்க எழுச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது இந்தச் சிறிய புத்தகம்தான்.

இப்படி புத்தகங்கள், தனிப்பட்டவர் வாழ்வு திருந்தவும் அடிமைப்பட்ட நாடுகள் விழித்தெழவும் காரணமாக இருந்துள்ளன. பிரிட்டனில் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் இந்த உலக புத்தக தின நன்கொடையாக பள்ளிச் சிறாருக்கு ஒருபவுண்டு பணம் கொடுக்கும் பழக்கத்தை 1998ல் தொடங்கியிருக்கிறார். அந்நாட்டுப் புத்தக நிலையங்களும் இந்த விலையில் புத்தகங்களைச் சிறார்க்கென விநியோகிக்கின்றனவாம்.

அன்பர்களே, நல்ல புத்தகங்களை, அதிலும் குறிப்பாக மதங்களிலுள்ள ”புனித புத்தகங்களை” வாசிக்க வாசிக்க அவற்றில் நம்மையே நாம் அடையாளம் காண முடியும். நாம் வாழ்க்கையில் எழுப்பும் கேள்விகளுக்கானப் பதில்கள் அவற்றில் கிடைக்கும். ஒவ்வொரு வீட்டிலும் இந்தப் புனித நூல்கள் இருக்க வேண்டும். அவற்றிலிருந்து தினமும் குறைந்தது ஓர் அதிகாரமாவது வாசிக்கப்பட வேண்டும். இந்தப் புனித புத்தகங்கள் சுட்டிக் காட்டும் வழிகளில் உண்மையிலேயே அனைவரும் நடந்தால், உலகில் இடம் பெறும் இனவெறியும் நிறவெறியும் அந்நியர்மீதான வெறுப்பும் சகிப்பற்றதன்மையும் மறைந்தொழியும். இத்திங்களன்று ஜெனீவாவில் தொடங்கியுள்ள இனப்பாகுபாடு ஒழிப்பு குறித்த ஐ.நா.வின் சர்வதேச கருத்தரங்கு பற்றி இஞ்ஞாயிறன்று பேசிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், சகிப்புத்தன்மையை ஏற்படுத்த தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், இது குறித்து கல்வி புகட்டப்பட வேண்டுமெனவும் RealAudioMP3 கோரினார்.

எனவே இவ்வியாழக்கிழமை சிறப்பிக்கப்படும் இந்த உலக புத்தக தினம், நம்மில் புத்தக வாசிப்பையும் புத்தகங்களை வாங்கிப் படிக்கும் பழக்கத்தையும் அதிகப்படுத்தட்டும். வளரும் தலைமுறையினரையும் இதில் வளர்ப்போம். 'எழுத்தறியத் தீரும் இழிதகைமை' என்பது போல அறிவுக்காக மட்டுமன்று தன்மானத்தை நாமே உணரவும், அதனைக் காக்கவும் எழுத்தறிவைப் பெருக்குவோம். புத்தகங்களை பரிசுப் பொருட்களாக அளிப்பதை பழக்கமாக்கிக் கொள்வோம். வீட்டிற்கு ஒரு சமையல் அறை இருப்பது போன்று ஒரு நூலகம் அமைப்பது அவசியம் எனக்கருதுவோம். எழுத்தாளர்களையும் பதிப்பகங்களையும் ஊக்குவிப்போம், கௌரவிப்போம். நல்ல புத்தகங்கள் நம் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் உற்ற தோழர்கள் என உணருவோம்.

வானொலி நண்பர்களே! நம்மை நாம் தேடி அடைய நிச்சயமாக நமக்கென ஒரு புத்தகம் தனது எழுத்துக்களுடன் காத்திருக்கிறது. ஒருவிதை ஜெயிப்பதற்கு ஒருமரம் எத்தனைமுறை பூக்க வேண்டியிருக்கிறது தெரியுமா!








All the contents on this site are copyrighted ©.