2009-04-18 16:00:40

புனித நற்செய்தியை கடைபிடிப்பதே பிரான்சிஸ்கன் துறவிகளின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும், திருத்தந்தை


ஏப்.18, 2009: நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் புனித நற்செய்தியை கடைபிடிப்பதே உலகப் பிரான்சிஸ்கன் துறவிகளின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.

பிரான்சிஸ்கன் சபையின் ஒழுங்குகள் அங்கீகரிக்கப்பட்டதன் 800ம் ஆண்டை முன்னிட்டு அசிசி நகரில் பேரவை நடத்திய, புனித பிரான்சிஸ் பெயரில் இயங்கும் சபைகளின் ஏறத்தாழ மூவாயிரம் பிரதிநிதிகளை இன்று காஸ்தெல் கண்டோல்போவில் சந்தித்த திருத்தந்தை இவ்வாறு கூறினார்.

நற்செய்தி, வாழ்வின் சட்டமாக இருக்கின்றது, சபையின் ஒழுங்குகளும் பிரான்சிஸ்கன் துறவிகளின் வாழ்வும் நற்செய்தியை கடைபிடிப்பதே என்றுரைத்த அவர், இவ்வாறு வாழ்வதன் மூலம் ஒவ்வொரு காலத்தில் வாழ்வோரை, குறிப்பாக இளையோரை கிறிஸ்துவின் பக்கம் ஈர்க்க முடியும் என்றார்.

உலகெங்கும் நற்செய்தியைப் பரப்புவதற்கு இச்சபையினர் ஆற்றி வரும் பணிகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்த திருத்தந்தை, திருச்சபையின் மீது பற்று கொண்டிருந்த புனித பிரான்சிஸ்குவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்குமாறும் வலியுறுத்தினார்.

அண்மையில் இத்தாலியின் அப்ருஸ்ஸோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல ஆலயங்கள் மிகவும் சேதமடைந்துள்ளன என்ற அவர், இன்று மனிதரும் சமூகமும் என பல ஆலயங்கள் பழுதடைந்துள்ளன, பிரான்சிஸ்கன் சபையினர் இந்த ஆலயங்களைக் கட்டி எழுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ், தமது சபையின் ஒழுங்குகள் அங்கீகாரம் பெறுவதற்காக 1209ம் ஆண்டு திருத்தந்தை மூன்றாம் இன்னோசென்ட்டிடம் அவற்றைச் சமர்ப்பித்தார். அவை அங்கீகரிக்கப்பட்டதன் 800ம் ஆண்டு இவ்வாண்டு சிறப்பிக்கப்பட்டு வருகிறது.










All the contents on this site are copyrighted ©.