2009-04-18 16:09:02

தென் பகுதி கிறிஸ்தவர்கள் வவுனியாவில் போர் அகதிகளைச் சந்தித்துள்ளனர்


ஏப்.18,2009: இலங்கையில் 25 வருடங்களுக்கு மேலாக இடம் பெற்று வரும் சண்டையினால் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்குமிடையே ஏற்பட்டுள்ள வெறுப்புச் சுவரைத் தகர்த்தெறியும் நோக்கத்தில், தென் பகுதி மக்கள் வட பகுதி மக்களைச் சந்திக்கும் நடவடிக்கைகளைச் செய்து வருகிறது கிறிஸ்தவ தோழமை இயக்கம்.

கொழும்புவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த இயக்கம், போரினால் பாதிக்கப்பட்டுள்ள வவுனியா மற்றும் பிற வட பகுதி நகரங்களில் வாழும் மக்களை தென் பகுதி மக்கள் சந்தித்து தங்களின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கச் செய்துள்ளது.

இதை வார நடவடிக்கையாகச் செய்து வருவதாகத் தெரிவித்த இதன் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அருட்திரு சரத் இடாமல்கோட், தமிழ் சமூகம் சிங்கள அரசால் நடத்தப்படும் விதம் குறித்து மிக ஆழமாகப் புண்பட்டு இருக்கின்றது என்றார்.

மேலும், சிங்களக் கிறிஸ்தவர்களும் தங்களின் நீதியான போராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை என்ற உணர்வும் தமிழ் சமூகத்திடம் இருப்பதாக அக்குரு கூறினார்.

முதல் கட்டமாக இரண்டு குருக்களும் 41 கிறிஸ்தவரும் வவுனியா சென்றுள்ளனர். வருகிற திங்களன்று அடுத்த குழு செல்லவுள்ளதாக குரு இடாமல்கோட் ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.