2009-04-18 16:07:54

திருத்தந்தையின் கருத்தடை சாதனங்கள் குறித்த கருத்துக்களுக்கு எழுந்துள்ள விமர்சனங்களுக்குத் திருப்பீடம் கண்டனம்


ஏப்.18, 2009: திருத்தந்தை தமது ஆப்ரிக்கத் திருப்பயணத்தின் போது கருத்தடை சாதனங்கள் மற்றும் எய்ட்ஸ் குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு எழுந்துள்ள விமர்சனங்கள், திருத்தந்தையை மௌனப்படுத்த எடுக்கப்படும் முயற்சி என்று சொல்லி அவற்றிற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது திருப்பீடம்.

திருத்தந்தையின் அக்கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று சொல்லி அதற்கு அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்குமாறு பெல்ஜிய நாடாளுமன்றம் அந்நாட்டு அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து, திருப்பீடத்துக்கான பெல்ஜியத் தூதுவர் இப்புதனன்று போராட்டத்தைத் தொடங்கினார்.

பெல்ஜிய நாடாளுமன்றத்தின் இத்தீர்மானத்தையொட்டி வருத்தம் தெரிவித்து இவ்வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்ட திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, பெல்ஜியத்திற்கும் திருப்பீடத்திற்குமிடையே நிலவும் தூதரக உறவுச் சூழலில் இத்தகைய செயல் வழக்கத்திற்கு மாறானது என்று குறிப்பிட்டுள்ளார்.

திருத்தந்தையின் நேர்காணலிலிருந்து தனிப்பட்ட ஒரு பகுதியை அதன் சூழலிலிருந்து பிரித்து எடுத்து குறை கூறுவது சரிதானா என்பதை பெல்ஜிய நாடாளுமன்றம் சிந்தித்திருக்க வேண்டும் என்று கர்தினாலின் அறிக்கை கூறுகிறது.

சில தலைப்புகள் குறித்த தெளிவான ஒழுக்கநெறி முறைகளையும், திருச்சபையின் கோட்பாட்டுப் போதனைகளையும் திருத்தந்தை வெளிப்படுத்தக் கூடாது என்பது போன்று, சில குழுக்கள் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் அவரை மிரட்டும் நோக்கத்தைக் கொண்டுள்ளதைத் தெளிவாகக் காட்டுகின்றன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

ஆப்ரிக்கர்களும் ஆப்ரிக்காவின் உண்மையான நண்பர்களும் திருத்தந்தையின் கருத்துக்களைப் பாராட்டியிருப்பது ஆறுதலாக இருக்கின்றது என்று அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

பிரான்ஸ், ஜெர்மனி, ஐ.நா.எய்ட்ஸ் தடுப்பு மையம், பிரிட்டன் மருத்துவ பத்திரிகை த லான்செட் ஆகியவை கருத்தடை சாதனங்கள் மற்றும் எய்ட்ஸ் குறித்தத் திருத்தந்தையின் கருத்துக்கள் பொறுப்பற்றவை மற்றும் ஆபத்தானவை என்று சொல்லி அவரைக் குறை கூறியுள்ளன.

82 வயதாகும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பாப்பிறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் நான்காம் ஆண்டு இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.