2009-04-18 11:59:39

ஞாயிறு மறையுரை .190409 .


உயிர்ப்பு விழாவுக்குப் பின்னர் 2 ஆம் ஞாயிறு . வாசகம் நற்செய்தி தூய யோவான் 20 , 19- 31 .



இன்றைய நற்செய்தி இயேசு கடவுளின் திருமகன் என்பதற்கான ஆணித்தரமான ஆதாரத்தை நம்முன் வைக்கிறது . இந்த மிக முக்கியமான ஆதாரத்தை திருத்தூதர் தோமா நமக்குத் தருகிறார் . அவரை சந்தேகத் தோமா எனச் சிலர் கூறுவார்கள் . ஆனால் அவரைத் துணிவான தோமா என்றே நாம் அழைக்க வேண்டும் . வாயை மூடிக் கொண்டு அமைதி காப்பதற்குப் பதிலாக , உண்மை எதுவென அறியத் தடைகளைத் தாண்டி உரிமையோடு மெய்ப்பொருளைத் தேடும் துணிவுள்ளவர் தோமா .



முதல் மூன்று நற்செய்தியாளர்களும் தோமாவின் அமைதியான வீரருக்குரிய துணிவு பற்றி எழுதத் தவறிவிட்டார்கள் . திருத்தூதர் யோவான் மட்டுமே நமக்கு தோமா பற்றிக்கூறுகிறார் . தோமாவின் நேர்மை மற்றும் உண்மையைக் கண்டறியும் போக்கு பற்றிய வேறு சில நிகழ்ச்சிகளையும் திருத்தூதர் தோமா தருகிறார். யோவான் நற்செய்தி 11, 16 ல் கிறிஸ்துவின் உயிருக்கு ஆபத்தான வேளையில் தோமா உடனிருக்கும் மற்ற சீடரிடம் கூறுகிறார் , நாமும் செல்வோம் . அவரோடு இறப்போம் , என்கிறார் .

யோவான் 14 , 5 ல் இயேசு சீடர்களிடம் மறுவாழ்வு பற்றிக் கூறுகிறார் . அதுபோது சீடரிடம் , நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும் என்கிறார் . ஆனால் சீடர்களுக்கு இயேசு என்ன கூறுகிறார் எனத் தெரியாது . ஏதாவது கேள்வி கேட்டு தம் அறியாமையை வெளிப்படுத்தப் பயந்து கொண்டு மெளனம் சாதித்துவிடுகின்றனர் . ஆனால் தோமா குறுக்கிட்டுப் பேசுகிறார் . ஆண்டவரே நீர் எங்கே போகின்றீர் என்றே எங்களுக்குத் தெரியாது . அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ளமுடியும் . தோமா மெளனமாக இருந்திருந்தால் இயேசு கூறிய அந்த அற்புதமான அமுத மொழிகளை நாம் கேட்டிருக்க முடியாது . இயேசு தோமாவிடம் , வழியும் உண்மையும் வாழ்வும் நானே . என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை என்றார் . தூதர் தோமா அவர்களே ஆயிரம் நன்றிகள் . உமது கேள்வியால் நாங்கள் இயேசுவின் அருமையான நல்வாக்கைக் கேட்க முடிந்தது .



இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சீடர்கள் மேல் மாடியில் கதவுகளுக்குத் தாளிட்டுக் கொண்டு யூத மதத் தலைவர்களுக்கு அஞ்சிக் கொண்டு ஒளிந்து கொண்டிருந்தார்கள் . பயத்தை நீக்க ஒன்றாகக் கூடியிருந்தார்கள் . ஆனால் ஆச்சரியம் . தோமா அவர்களோடு இல்லை . தோமாவுக்கு எல்லோரோடும் சேர்ந்திருந்து தாளிட்ட அறைக்குள் பதுங்கி பயத்தைப் போக்க வேண்டிய தேவையில்லை . அவர் வெளியே எங்கோ தனியாகச் சென்றிருந்தார் . அவர் எதையும் தனித்திருந்து சிந்திக்கக் கூடியவர் .



ஆண்டவர் இயேசு எதிர்பாராது சீடர்களின் அறையில் அவர்களைச் சந்திக்கிறார் . அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . பின்னர் தோமா திரும்பி வந்தபோது தாங்கள் இயேசுவைக் கண்டதாகக் கூறுகின்றனர் . தோமா அமைதியாக இருக்கிறார் . சீடர்கள் கூறியதை நம்பி மகிழ்ச்சிப்படுவதற்கு முன்னர் அவர்கள் கூறியதை உறுதிசெய்ய விரும்புகிறார் . இயேசுவின் காயங்களில் தம் விரல்களை இட்டுப் பார்க்க விரும்புகிறார் . ஒரு வாரத்துக்குப் பின்னர் சீடர்களுக்கு இயேசு தோன்றியபோது தோமாவை அழைத்து விரல்களைத் தம் காயங்களில் இடுமாறு அழைக்கிறார் . தோமா தாம் முன்னர் காயங்களில் தம் விரல்களை வைத்து உறுதி செய்யவேண்டும் எனக் கூறியதற்கு மாற்றுக் கருத்துத் தெரிவிக்கவில்லை . தோமாவின் மனத்தில் ஏதும் கவலை இல்லை . தாம் கூறியபடி காயங்களில் விரலை வைத்து உறுதி செய்யத் தயங்கவில்லை . ஆனால் இப்போது அவர் உண்மையைக் கண்டறிந்துவிட்டார் . என் ஆண்டவரே , என் தேவனே எனக்கூறி இயேசுவின் பாதங்களில் விழுந்து வணங்குகிறார் . அவர் உரைத்த அந்தப் பேருண்மையை நாம் மனத்தில் கொள்ளவேண்டுமேயொழிய அவர் சந்தேகப்பட்டதை எண்ணிக் கொண்டிருக்கத் தேவையில்லை .

தோமா நம்மையும் சிந்திக்கமாறும் , எதனையும் அப்பட்டமாக நம்புவதற்கு முன்னர் ஆராய்ந்து தெளிவடையுமாறும் , எதையும் ஏன் , எப்படி எனக் கேட்டுத்தெளியுமாறும் நல்ல பாடத்தைக் கற்பிக்கிறார் . நாம் நம்பும் கடவுளைப் பற்றிய நம்பிக்கையை பல்வேறு வழிகளில் நாம் கண்டுணரவேண்டும் . நேரிடையாக , கேள்விகளைத் தொடுத்து நம் நம்பிக்கை உண்மையானதாக இருந்தால்தான் அது செயல்படமுடியும் . கேட்பதற்கெல்லாம் தலையாட்டிக்கொண்டு உண்மையை கண்டுணராது குழப்பமான நிலையில் அமைதியாக இருப்பது தோமா கற்றுத்தரும் பாடத்துக்கு மாறுபட்டது .

மீன் பிடித்துக் கொண்டிருந்த செம்படவர்கள் உரோமைய சாம்ராஜ்யத்தையும் , யூத குலக் கெடுபிடிகளையும் தாண்டி இயேசுவின் கொடியை உலகெங்கும் பறக்கவிட்டிருக்கிறார்கள் என்பதே உயிர்த்த இயேசுவின் தெய்வ ஆட்சி உலகில் அரங்கேற்றமாகியுள்ளது என்பதற்கு மிகப் பெரிய சான்றாக அமைகிறது .



தோமாவின் நம்பிக்கையின் ஒளி நம்மையும் தொற்றிக் கொண்டு நம் வாழ்வையும் ஒளிரச் செய்யட்டும் . நாமும் அவர் இயேசுவை ஆண்டவர் என உணர்ந்தபோது கூறிய , என் ஆண்டவரே , என் தேவனே எனக் கூறிச் செபிக்கக் கற்றுக் கொள்வோம் .








All the contents on this site are copyrighted ©.