2009-04-15 14:54:38

வரலாற்று நிகழ்வான இயேசுவின் உயிர்ப்பு, உலகையும் ஒவ்வொருவரையும் மாற்றுகின்றது., திருத்தந்தை


ஏப்ரல்15,2009 இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவுக்குப் பின்னர் உரோமைக்கு ஏறத்தாழ 30 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள காஸ்தல் கண்டோல்போ பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இன்று காலை ஹெலிகாப்டரில் வத்திக்கான் வந்து தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்குப் பல மொழிகளில் புதன் பொது மறை போதகம் வழங்கினார். ஏப்ரல் 16ம் தேதி தமது 82வது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு விசுவாசிகள் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலையும் பாடினர். RealAudioMP3 இம்மறை போதகம் உயிர்ப்பு திருவழிபாட்டுக் காலத்தின் துவக்கத்தில் இடம் பெறுகிறது. உயிர்ப்பைத் தொடர்ந்து வரும் இக்காலம் சாவை வென்று வெற்ரி வீரராய் வாழும் ஆண்டவரின் உயிர்ப்பைப் பாடுகின்றது. புனித வெள்ளி சிலுவைப்பாதைக்குப் பின் உயிர்ப்புக்கு முன்னான நம் திருவிழிப்பு வழிபாடுகள் நம்மை, ஆறுதல், அமைதி மற்றும் நம்பிக்கைகளைக் கொண்ட ஒளியின் பாதையில் நடக்க வைக்கின்றன. இயேசுவின் உயிர்ப்பு உண்மையானது, சரித்திரப்பூர்வமானதும் என நாம் அறிவிப்பது நம் விசுவாசத்திற்கும் கிறிஸ்தவ சாட்சிய வாழ்வுக்கும் அடிப்படையானது. அவரின் உயிர்ப்பு என்பது வாழ்வுக்கு மீண்டும் திரும்பி வந்த ஒருநிகழ்வு மட்டுமல்ல, மாறாக அனைத்து மனிதகுலத்தையும் வரலாற்றையும் உலகம் முழுமையையும் மாற்றியமைக்கும் புதிய வாழ்வுக்குள் அடியெடுத்து வைப்பதாகும். கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில் புனித பவுல், விவிலியத்தில் உரைக்கப்பட்டுள்ளபடி இயேசு இறந்து, இறந்தோரிடமிருந்து உயிர்த்தவர் எனத் துவக்கத்திலிருந்தே அறிவிக்கப்பட்டதை மீண்டும் நினைவூட்டுகிறார். கடவுளின் துன்புறும் ஊழியனாகிய இயேசு நம் பாவங்களைச் சுமந்தும் நமக்காகப் பரிந்துரைத்தும் நம்மை நம் குற்றங்களிலிருந்து புனிதப்படுத்தினார். தன் இறப்பின்வழி இறப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த இயேசு, தான் உயிர்த்தெழுந்ததன்வழி உலகுக்குப் புதுவாழ்வைக் கொணர்ந்தார். இயேசுவின் உயிர்ப்பு தரும் மகிழ்ச்சி நாம் நற்செய்திக்கு விசுவாசமுடன் வாழவும் தாராள மனதுடன் சாட்சியம் வழங்கவும் நமக்கு மன உறுதியைத் தருகின்றது.

இவ்வாறு ஆங்கிலத்தில் உரை வழங்கி அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை RealAudioMP3 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.