2009-04-15 14:13:47

நியு மெக்சிகோவில் மரண தண்டனை சட்டம் இரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு உரோம் கொலோசேயத்தில் ஒளியேற்றும் நிகழ்வு


ஏப்ரல்15,2009. அமெரிக்க ஐக்கிய நாட்டு தென்மேற்கு மாநிலமான நியு மெக்சிகோவில் மரண தண்டனை சட்டம் இரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு உரோம் கொலோசேயத்தில் இப்புதனன்று ஒளியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

நியு மெக்சிகோ மாநிலம், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ரியுள்ளதை முன்னிட்டு உரோம் கொலோசேயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்மாநில ஆளுனர் பில் ரிச்சர்டுசன், பேராயர் மைக்கிள் ஷீஹான் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இப்பிரதிநிதிகள் குழு, திருத்தந்தையின் இப்புதன் பொது மறைபோதகத்திலும் கலந்து கொண்டது.

ஐக்கிய நாடுகள் பொது அவை உலக அளவில் மரண தண்டனை சட்டம் இரத்து செய்ய அழைப்புவிடுத்த 2007ம் ஆண்டு டிசம்பரிலிருந்து உரோம் கொலோசேயத்தில் ஒரு சிறப்பு ஒளியேற்றும் நிகழ்வு உரோம் சான் எஜிதியோ கத்தோலிக்க அமைப்பினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆயினும் மரண தண்டனைக்கு எதிரான சர்வதேச நாள் கடைபிடிக்கப்படும் நாளில் இவ்வாறு ஒளியேற்றும் நிகழ்வை சான் எஜிதியோ 2002ம் ஆண்டில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.