2009-04-15 14:11:42

இலங்கையின் அமைதிக்காக உயிர்த்த கிறிஸ்துவிடம் செபிக்க ஆயர்கள் அழைப்பு


ஏப்ரல்15,2009. இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு, இருள் மற்றும் அழிவின் சக்திகள் மீது வெற்றி கொள்ள அழைப்பு விடுக்கும் வேளை, இலங்கையில் இடம் பெறும் சண்டையும் அப்பாவி தமிழ் மக்களின் துன்பங்களும் முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு அந்நாட்டு ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

கிறிஸ்துவை நோக்குவதன் மூலம், மனித சமுதாயம், மரணம், போர், மற்றும் பிரிவினைகளை மேற்கொண்டு புதிய வாழ்வுக்கு உயிர்க்க முடியும் என்று கொழும்பு பேராயர் ஆஸ்வால்டு கோமிஸ், ஆங்கிலிக்கன் ஆயர் துலீப் தெ சிக்கேரா, இலங்கை இயேசு சபை மாநில அதிபர் அருள்தந்தை மரிய அந்தோணி ஆகியோர் இணைந்து கிறிஸ்துவின் இந்த உயிர்ப்பு காலத்தையொட்டி வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.

போரினால் எந்த நிலையான பலன்களையும் கொண்டு வரமுடியாது என்றுரைத்த பேராயர் ஆஸ்வால்டு கோமிஸ், நாட்டின் அமைதியும் வளமையும் உரையாடல் வழியாகவே ஏற்படுத்த முடியும் என்று கூறினார்.

இயேசு உயிர்ப்பு காலத்திலும் அனைத்து இலங்கை மக்களும் போரின் ஆபத்துக்களையும், நாட்டிற்குள்ளே புலம் பெயர்ந்துள்ள மக்களின் துயரங்களையும் மதமாற்றத் தடைச் சட்டத்தின் வன்பிடியையும் அனுபவிக்கின்றனர் என்று கூறிய அவர், குறுகிய இலக்குகளை நிறைவேற்றுவதற்காக அப்பாவி தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் ஒவ்வொரு முயற்சியையும் வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார்.

நாட்டின் அமைதிக்காக உயிர்த்த கிறிஸ்துவிடம் செபிக்குமாறும் அத்தலைவர்களின் அறிக்கை அழைப்பு விடுக்கிறது.








All the contents on this site are copyrighted ©.