2009-04-13 14:09:58

உயிர்த்த கிறிஸ்துவின் மகிமை மனித முகங்களில் தொடர்ந்து சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது, திருத்தந்தை 16ம் பெனடிக்ட்


ஏப்ரல் 13, 2009. உயிர்த்த கிறிஸ்துவின் மகிமை மனித முகங்களில் தொடர்ந்து சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது என்று தனது அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

பாப்பிறைகளின் கோடை விடுமுறை மாளிகையான காஸ்தல் கண்டோல்போவிலிருந்து இன்று அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, உயிர்த்த கிறிஸ்து, நலிந்தோருக்கு உறுதியும் துன்புறுவோருக்கு விடுதலையும் இறப்போருக்கு ஆறுதலும் தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறார் என்றார்.

நான் உயிர்த்துவிட்டேன், என்றும் உங்களோடு இருக்கிறேன் என்ற இயேசுவின் வார்த்தைகளை இந்தப் பாஸ்கா காலத்தில் அடிக்கடி கேட்கிறோம் என்ற அவர், திருச்சபையும் இது ஆண்டவர் உயிர்த்த நன்னாள், எனவே அக்களிப்போம், அகமகிழ்வோம் என்று தனது உணர்வுகளைப் பாடி வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார்.

நான் உயிர்த்துவிட்டேன், என்றும் உங்களோடு இருக்கிறேன் என்ற இயேசுவின் உறுதிப்பாடு, எல்லாவற்றிக்கும் மேலாகத் திருநற்கருணையில் உண்மையாகின்றது என்றார் திருத்தந்தை.

திருச்சபையும் அதன் ஒவ்வோர் உறுப்பினரும் ஒவ்வொரு திருநற்கருணைக் கொண்டாட்டத்திலும் இயேசுவின் பிரசன்னத்தை அனுபவித்து அவரது அன்பின் வளமையினால் நன்மை அடைகின்றது என்றும் அவர் கூறினார்.

உயிர்த்த நம் ஆண்டவர் திருநற்கருணை திருவருட்சாதனத்தில் நம்மைப் பாவங்களிலிருந்து தூய்மைப்படுத்துகிறார், நம்மை ஆன்மீகத்தில் போஷிக்கிறார், நன்மைக்கும் தீமைக்கும் எதிரான போராட்டத்தில் நம்மைத் தாங்கிப் பிடிக்கிறார் என்றும் அவர் கூறினார்.

இயேசு, நமது விண்ணகம் நோக்கிய பயணத்தில் நம்மைப் பாதுகாப்பாக நடத்திச் செல்லுகிறார் என்ற திருத்தந்தை, கிறிஸ்துவின் புதிய வாழ்வெனும் கொடை நம் இதயங்களில் வளரவும் நித்திய மீட்புப் பாதை நோக்கி இட்டுச் செல்லவும் உதவும் என்று கூறினார்








All the contents on this site are copyrighted ©.