2009-04-12 12:53:59

திருத்தந்தையின் நகருக்கும் உலகுக்குமான Urbi et Orbi வாழ்த்துச் செய்தி.


புனித அகுஸ்தீனாரின் வார்த்தைகளில் கூற வேண்டுமெனில், “Resurrectio Domini, spes nostra - அதாவது நம் ஆண்டவரின் உயிர்ப்பே நம் நம்பிக்கை. மரணத்தில் வாழ்வு முடிந்துவிட்டதோ என நம்பிக்கை இழக்காமல் இருக்க, இந்த வார்த்தைகளுடனேயே இந்த மாபெரும் ஆயர் தம் விசுவாசிகளுக்கு, இயேசு நம்பிக்கை வழங்குபவராக உயிர்த்தெழுந்தார் என விவரித்தார்.

சாவுக்குப் பின் என்ன என்ற கேள்வி மனிதர்களை அதிகம் அதிகமாக ஆக்ரமிக்கிறது. ஆம். மரணம் என்பது இறுதி வார்த்தையல்ல, வாழ்வே இறுதியில் வெல்லும் என்பதை எடுத்துரைக்க இன்றையப் பெருவிழா நமக்கு உதவுகிறது. இது நம் ஆய்வறிவை அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக, இயேசு கிறிஸ்து சிலுவயில் அறையப்பட்டு, அடக்கப்பட்டு, மகிமை நிறை உடலோடு உயிர்த்தெழுந்த வரலாற்று உண்மையை அடிப்படையாகக் கொண்டது. இயேசுவில் நம்பிக்கைக் கொண்டுள்ள நாமும் முடிவற்ற வாழ்வைப் பெறும் பொருட்டு இயேசு உயிர்த்தெழுந்தார். இதுவே நற்செய்தியின் மையப்பகுதி. புனித பவுல் கூறுவதுப் போல, இயேசு உயிர்த்தெழவில்லையெனில் நம் போதனைகளும் வீண், நம் விசுவாசமும் வீணே.

உயிர்ப்பு பெருநாள் விடியலிலிருந்து நம்பிக்கயின் புது ஊற்று உலகை நிறைத்துள்ளது. அந்நாளிலிருந்து நம் உயிர்ப்பும் துவங்கியுள்ளது. ஏனெனில் உயிர்ப்பு நாள் என்பது வரலாற்றின் ஒரு நேரத்தை மட்டும் குறிக்கவில்லை, மாறாக அது ஒரு புது நிலைப்பாடு. உயிர்ப்பு என்பது வெறும் வார்த்தைத் தத்துவமல்ல. அது மண்ணுக்கும் விண்ணுக்கும் இடையே புதிய பாதையைத் திறந்த ஒரு வரலாற்று உண்மை. இது ஒரு பழங்கதையோ , கனவோ அல்ல. இது வெறும் காட்சியோ, நடைமுறைக்கு அப்ப்பாற்ப்பட்ட கற்பனை உலகோ அல்ல. மாயமருட்சி தரும் கட்டுக்கதையும் அல்ல. மாறாக இது தனித்துவம் நிறைந்த நிகழ்வு. கல்லறையிலிருந்து வெற்றியுடன் வெளியேறிய நிகழ்வு.

இயேசுவின் உயிர்ப்பைக் குறித்த அறிவுப்பு, நாம் வாழும் இவ்வுலகின் இருண்டப் பகுதிகளை ஒளிர்விப்பதாக உள்ளது. உலகாயுதப் போக்குகள் நிறைந்த இவ்வுலகைப் பற்றிக் குறிப்பிடுகிறேன். இவ்வுலகாயுதப் போக்குகளால் நம்பப்படும் ஒருவித வெறுமை உணர்வையே, மனித வாழ்வின் நோக்காகக் கொண்டுள்ளோம். இயேசு உயிர்க்கவில்லையெனில், இந்த வெறுமை நிலையே அனைத்தையும் ஆக்ரமித்திருக்கும்.

புதியது என்றுரைக்க ஏதேனும் உள்ளதா என்ற கேள்விக்கான விடை இன்றைய நாளில் கிட்டுகிறது. அக்கேள்விக்கான பதில் ஆம் என்பதே. உயிர்ப்பு நாள் அன்று அனைத்தும் புதுப்பிக்கப்பட்டன. இதனை ஏற்பவர்களின் வாழ்வை இந்தப் புதிய நிலை மாற்றுகிறது. புனிதர்களின் வாழ்விலும், புனித பவுலின் வாழ்விலும் இதுவே நிகழ்ந்தது.

இன்று வெறுமை என்பது அனைத்தையும் தன் கட்டுக்குள் வைக்கவில்லை, மாறாக இயேசுவின் அன்பு பிரசன்னமே அங்குள்ளது. மரணத்தின் ஆட்சியிலிருந்து விடுதலை கிட்டியுள்ளது.

மரணம் நம் மீதும் நம் உலகின் மீதும் இனி மேலும் தன் அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லையெனினும், அதன் முந்தைய அதிகாரத்தின் சில கூறுகள் இன்னும் காணப்படத்தான் செய்கின்றன். இயேசு தன் உயிர்ப்பின் வழி தீமையின் ஆணிவேரை அழித்துள்ள போதிலும், அவ்வெற்றியைத் தக்க வைக்க நம் உதவியை எதிர்ப்பார்க்கிறார். அவரின் ஆயுதங்களான நீதி, உண்மை, இரக்கம், மன்னிப்பு மற்றும் அன்பின் துணை கொண்டு நாம் இயேசுவின் வெற்றியை தக்கவைக்க உதவ வேண்டும். இதேச் செய்தியைத் தான் அங்கோலா மற்றும் கேமரூன் நாடுகளுக்கான திருப்பயண்த்தின் போது ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு வழங்க விரும்பினேன். முடிவற்ற, கொடுமையான முரண்பாட்டுக் கொள்கை மோதல்களால் ஆப்ரிக்கக் கண்டம் துயருறுகிறது, இரத்தம் சிந்தலும் அழிவும் தொடர்கின்றன. அக்கண்டத்தின் மக்கள் பசியாலும், ஏழ்மையாலும், நோய்களாலும் மடிகின்றனர். இன்னும் சில வாரங்களில் நான் பயணம் செய்ய உள்ள புனித பூமிக்கும் இச்செய்தியைத்தான் எடுத்துச்செல்ல உள்ளேன். ஒப்புரவு என்பது கடினமானது ஆனால் தவிர்க்கக் கூடாதது. அதுவே அனைவரின் பாதுகாப்பான வாழ்வுக்கும், அமைதியான ஒத்திணங்கிய வாழ்வுக்குமான முன் நிபந்தனை. இந்த ஒப்புரவானது இஸ்ரேயல் பாலஸ்தீனிய மோதல்களை தீர்ப்பதற்கான உன்மையான முயற்சிகளை புதுப்பித்து அதில் நிலைத்திருப்பதன் வழியே தான் பெறமுடியும். என் எண்ணங்கள் மத்தியக் கிழக்கு நாடுகளையும் இவ்வுலகையும் நோக்கிச் செல்கின்றன.

உலக உணவுப் பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி, ஏழ்மையின் புதிய பழைய வடிவங்கள், உலகத் தட்ப வெப்ப நிலை மாற்ற பாதிப்புகள், வன்முறைகள், ஒன்றுமில்லாமையினால் குடிபெயரத் தள்ளப்படுதல், பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல், வருங்காலம் குறித்த அச்சம் போன்ற் இன்றைய சூழல்களில் நம்பிக்கையின் அடிப்படைகளை மீண்டும் கண்டுகொள்ள வேண்டிய ஓர் அவசரத் தேவை உள்ளது. இவைகளுக்கு எதிரான, இயேசுவின் உயிர்ப்போடுத் துவங்கியுள்ள இவ்வமைதிப் போராட்டத்திலிருந்து எவரும் பின்வாங்க வேண்டாம். ஏற்கனவே நான் இன்று உரைத்ததுபோல் இயேசு தன் வெற்றியை உறுதிச் செய்ய அவரின் ஆயுதங்களான நீதி, உண்மை, கருணை, மன்னிப்பு மற்றும் அன்பு வழி உதவும் மனிதர்களைத் தேடுகிறார்.

இயேசுவின் உயிர்ப்பே நம் நம்பிக்கை. இதையே மகிழ்வுடன் இன்று திருச்சபை அறிவிக்கிறது. இறந்தோரிடமிருந்து இயேசு உயிர்த்துள்ளதால் இதனை திருச்சபை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அறிவிக்கிறது. தன் இதயத்தில் தாங்கும் இந்நம்பிக்கையை திருச்சபை அனைவருடனும், குறிப்பாக தங்கள் விசுவாசத்திற்காக, அமைதி மற்றும் நீதிக்கான அர்ப்பணத்திற்காக துன்புறும் இடங்களில் மக்களுடன் பகிர்ந்துக் கொள்ள ஆவல் கொள்கிறது. நன்மைகளை ஆற்றுவற்கான உறுதிப்பாட்டை தூண்டுவதாகும் நம்பிக்கையை, அது இழப்பைத் தரும் வேளைகளில் கூட திருச்சபை வேண்டுகிறது.

இயேசுவின் இதயமாம் மீட்பின் பாதுகாப்பான புகலிடம் நோக்கி மனிதகுலத்தை வழி நடத்தும்படி நம்பிக்கையின் விண்மீனாம் அன்னை மரி நோக்கி இன்று திருச்சபை செபிக்கிறது என்ற திருத்தந்தை, சிலுவையிலறையுண்டு பின் உயிர்த்த நம் வெற்றி வாகை மன்னர் நோக்கி மகிழ்வுடன் அல்லேலூயாப் பாடுவோம் எனத் தன் Urbi et Orbi, அதாவது உரோமை நகருக்கும் உலகுக்குமான உயிர்ப்பு விழா வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்தார்.








All the contents on this site are copyrighted ©.