2009-04-08 13:41:42

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


ஏப்ரல்08,2009. அன்பர்களே, இவ்வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று தினங்களும் கிறிஸ்தவர்களுக்கு மிக முக்கியமான நாட்கள். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிகழ்த்தும் இந்தப் புனித நாட்கள் திருவழிபாடுகளில் கலந்து கொள்வதற்கென பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகள் இந்நாட்களில் உரோமை வந்துள்ளனர். அவரின் இப்புதன் பொது மறைபோதகத்தைக் கேட்பதற்கும் 4300 பல்கலைக்கழக மாணவ மாணவிகள் உட்பட 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளும் திருப்பயணிகளும் வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தை நிறைத்திருந்தனர். இம்மாணவ மாணவியர் பிரான்ஸ், போலந்து, ஹங்கேரி, குரோவேஷியா, லித்துவேனியா, கானடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜெர்மனி, ஆஸ்ட்ரியா, பெல்ஜியம், ஸ்பெயின் மெக்சிகோ, புவர்த்தோ ரிக்கோ, பிரேசில் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் உரோமையில் நடந்து வரும் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான சர்வதேச கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள். திருத்தந்தை, இப்பொது மறை போதகத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் புனித வியாழன், புனித வெள்ளி, புனித சனி ஆகிய தினங்கள் பற்றிப் பேசினார். RealAudioMP3 RealAudioMP3

அன்புச் சகோதர சகோதரிகளே, திருவழிபாட்டு ஆண்டு முழுவதின் மையமாக இருக்கும்

மூன்று புனித நாட்களை இவ்வியாழனன்று தொடங்குகிறோம். இவை நமது மீட்பின் மைய நிகழ்வுகளில் நம்மை முழுவதுமாக ஈடுபடுத்தும் நாட்கள். திருஎண்ணெய் மந்திரிக்கும் திருப்பலி இம்மூன்று நாட்களுக்கு முன்நிகழ்வாக அமைகின்றது. இத்திருப்பலியில் குருக்கள், ஆயர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை புதுப்பிக்கிறார்கள். மேலும், இதில் திருஎண்ணெய் மந்திரிக்கப்பட்டு, தூய ஆவியின் கொடையை குறித்து நிற்கும் இதனை அர்ப்பணிக்கிறார்கள். நம் ஆண்டவரின் இறுதி இரவு உணவு திருப்பலியில் கிறிஸ்து நம்மீது கொண்டிருக்கும் மேலான அன்பின் அடையாளமான திருநற்கருணையை ஏற்படுத்தியதை நினைவுகூருகின்றோம். புனித வெள்ளியன்று திருச்சிலுவையை ஆராதிக்கும் போது 'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம் என்ற இயேசுவின் வார்த்தைகளின் முழுப் பொருளைத் தியானிக்கிறோம். நம் ஆண்டவரின் உயிர்ப்பின் மகிழ்ச்சிப் பாடலில் ஒவ்வோர் ஆலயமும் திளைக்கவிருக்கும் கிறிஸ்துவின் உயிர்ப்புக்காக புனித சனிக்கிழமையன்று மௌனமான நம்பிக்கையில் காத்திருக்கிறோம். பாஸ்கா பேருண்மைக் கொண்டாட்டமானது கிறிஸ்துவின் அன்பின் ஆழத்தை நி்னைவுபடுத்துகின்றது. இவர் தமது இறைமையை தனக்கென்று வைத்துக் கொள்ளாவோ அல்லது நமக்கும் அவருக்கும் இடையேயான தூரத்தின் அடையாளமாகவோ கொண்டிருக்க விரும்பவில்லை. மாறாக, மரணம் வரை நமது மனித இயல்பில் முழுவதும் பகிர்ந்து கொள்வதன் மூலம் அடிமையின் வடிவை ஏற்று தம்மையே வெறுமையாக்கினார். இவரின் இந்த மரணமானது, ஏதோ விதியின் படி நடந்ததல்ல. ஆனால் இது, அனைவரின் மீட்புக்காக வானகத்தந்தையின் விருப்பத்திற்கு கீழ்ப்படிவதில் சுதந்திரமாகத் தேர்ந்து கொண்டதாகும். இந்த மூன்று நாட்கள் கொண்டாட்டங்கள், கிறிஸ்துவின் பாஸ்கா பேருண்மைக்குள் நம்மை மிகுந்த ஆழமாக இட்டுச் செல்வதாக. இவ்வாறு இப்புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை, அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

RealAudioMP3







All the contents on this site are copyrighted ©.