2009-04-06 14:53:27

நிலக்கண்ணி வெடிகளும் கொத்து வெடி குண்டுகளும் தடை செய்யப்பட திருத்தந்தை அழைப்பு


ஏப்ரல் 06,2009. நிலக்கண்ணி வெடிகளும் கொத்து வெடி குண்டுகளும் தடை செய்யப்படுமாறு சர்வதேச சமுதாயத்திற்கு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் நான்காம் தேதி, சர்வதேச நிலக்கண்ணி வெடிகள் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுவதை ஞாயிறு மூவேளை செப உரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை, நிலக்கண்ணி வெடிகளைத் தடை செய்யும் ஒட்டாவா ஒப்பந்தம் அமலுக்கு வந்து பத்தாண்டுகள் ஆகியுள்ள வேளை, இவ்விழிப்புணர்வு தினம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கின்றது என்றார்.

1999ம் ஆண்டு மார்ச் ஒன்றாந் தேதி அமலுக்கு வந்த இவ்வொப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடாத நாடுகள், தாமதமின்றி கையெழுத்திடுமாறு வலியுறுத்திய திருத்தந்தை, இதற்குப் பலியாகியுள்ளவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைப்பதற்கான முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தார்.

இன்றைய நிலவரப்படி, உலகின் 80 விழுக்காட்டு நாடுகள், அதாவது 156 நாடுகள் இந்த ஒட்டாவா ஒப்பந்தத்தை அமல்படுத்தி வருகின்றன. சீனா, இரஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் உட்பட பிற நாடுகள் இதில் கையெழுத்திடவில்லை.

பல்வேறு நாடுகளில் 1997ம் ஆண்டிலிருந்து ஏறத்தாழ 4 கோடியே 20 இலட்சம் நிலக்கண்ணி வெடிகள் அழிக்கப்பட்டுள்ளன. 1990களின் தொடக்கத்தில் இவ்வெடிகளை உற்பத்தி செய்த 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 13, இன்றும் அவற்றைத் தயாரிப்பதாகச் சொல்லப்படுகின்றது.

2008ம் ஆண்டு, டிசம்பர் 3ம் தேதி ஆஸ்லோவில் கொத்து வெடி குண்டுகளைத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடங்கப்பட்டது. கொத்து வெடி குண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சிறிய குண்டுகளில் சில தரையில் விழுந்தும் வெடிக்காமல் இருப்பதால் அவை பொது மக்களுக்குச் சேதம் விளைவிக்கின்றன. போஸ்னியா, ஈராக், செர்பியா, கோசோவோ, லெபனன், இலங்கை உட்பட 21 நாடுகளில் இவை பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ஊடகங்கள் கூறுகின்றன.

 








All the contents on this site are copyrighted ©.