2009-04-06 14:50:26

திருச்சிலுவையில் கிறிஸ்துவின் எல்லையற்ற அன்பின் ஆழத்தைக் கண்டுணர திருத்தந்தை வேண்டுகோள்


ஏப்ரல் 06,2009. திருச்சிலுவையில் கிறிஸ்துவின் எல்லையற்ற அன்பின் ஆழத்தைக் கண்டுணருமாறு இத்திங்களன்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

உலக இளையோர் தினத் திருச்சிலுவையை ஆஸ்திரேலிய இளையோரிடமிருந்து பெறுவதற்காக உரோம் வந்திருந்த மத்ரித் உயர்மறைமாவட்ட இளையோரைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, கிறிஸ்து இளையோர் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதத்தில் அன்பு செய்கிறார் என்றார்.

கிறிஸ்துவின் அன்பிற்குப் பதிலன்பாக வாழ்வையே அவருக்கு அர்ப்பணிக்குமாறும் வலியுறுத்திய அவர், இவ்வழியில் செல்லும் பொழுது உலக இளையோர் தினத்தின் கனிகளை அனுபவிக்க முடியும் என்றும் கூறினார்.

உறுதியான இலக்கில் நிலைநிறுத்தப்படாத வாழ்க்கைப் பயணம் நிச்சயமற்ற சாலையில் செல்லும் என்ற திருத்தந்தை, கிறிஸ்துவை நோக்கிய சாலையில் உங்கள் தோழர்களையும் கவர்ந்து அவர்களும் தங்கள் வாழ்வின் நாயகனை அறியச் செய்யுங்கள் என்றார்.

கிறிஸ்துவை அன்பு செய்பவர் திருச்சபையையும் அன்பு செய்கிறார் என்றும், திருச்சிலுவையை சுமந்து சென்ற சீரேன் ஊர் சீமோன் போன்று மனிதகுல மீட்பில் சிறப்புப் பங்காற்ற வேண்டுமென்றும் மத்ரித் இளையோர்க்கு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

இத்திருச்சிலுவையானது இத்திங்களன்று மத்ரித்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு புனித வெள்ளி திருவழிபாட்டில் வைக்கப்படும், பின்னர் ஸ்பெயினின் அனைத்து மறைமாவட்டங்களுக்கும் திருப்பவனியாகக் கொண்டு செல்லப்பட்டு 2011ம் ஆண்டு சர்வதேச இளையோர் தினத்திற்கு மீண்டும் மத்ரித்துக்கு கொண்டு வரப்படும்.








All the contents on this site are copyrighted ©.