2009-04-06 14:51:29

தியாகத்தின் அர்த்தத்தை இளையோருக்கு விளக்கினார் திருத்தந்தை


ஏப்ரல் 06,2009. இறையன்பிற்காகச் செய்யப்படும் தியாகமும், அவரது உண்மையோடு நிலைத்திருப்பதற்கான ஆசையும் வாழ்வை வளப்படுத்தும் மற்றும் அதனை மேலானதாக்கி வெற்றியடையச் செய்யும் என்று இளையோரிடம் கூறினார் திருத்தந்தை.

இஞ்ஞாயிறன்று மறைமாவட்ட அளவில் சிறப்பிக்கப்பட்ட 24ம் சர்வதேச இளையோர் தினத்தை முன்னிட்டு வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் ஏறத்தாழ நாற்பதாயிரம் விசுவாசிகளுக்குத் திருப்பலி நிகழ்த்தி மறையுரை ஆற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

அன்பு நண்பர்களே, இயேசுவைக் காண வேண்டுமென்ற காரணத்திற்காக நாம் இங்கு குழுமியுள்ளோம் என்றுரைத்த திருத்தந்தை, இதே நோக்கத்திற்காக இலட்சக்கணக்கான இளையோர் கடந்த ஆண்டு சிட்னி சென்றார்கள் என்றார்.

இந்தத் திருப்பலியின் இறுதியில் சர்வதேச இளையோர் தினத் திருச்சிலுவையை, ஆஸ்திரேலிய இளையோர், ஸ்பெயின் இளையோரிடம் கொடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்தத் திருச்சிலுவையானது உலகின் ஒரு பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்கு கடல் கடந்து வந்துள்ளது, அதன் பாதையில் நாம் செல்லும் போது நமது பாதையைக் கண்டு கொள்கிறோம் என்றார் திருத்தந்தை.

உண்மையில் அச்சிலுவையை நாம் தொடும் பொழுதும், அதனைத் தூக்கும் பொழுதும் இறைவனின் மறைபொருளை, இயேசு கிறிஸ்துவின் பேருண்மையைத் தொடுகிறோம் என்ற அவர், மீட்பளிக்கும் ஒரே உண்மையாகிய கடவுளன்பின் பேருண்மையைத் தொடுகிறோம் என்றார்.

திருச்சிலுவையை ஏற்காமலும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவோடு ஒன்றிணைந்து நடக்காமலும் இருந்தால் நமது வாழ்வு வெற்றிக்கனியை எட்டாது என்றும் உரைத்த திருத்தந்தை, இந்த இறையன்பிற்காகச் சில தியாகங்கள் செய்தால் நமது வாழ்வு வளமடையும் என்றும் கூறினார்.

தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர் என்ற நாம் உடனடியாகச் செயல்படுத்த வேண்டிய உண்மையானது, நமக்கு விடுதலையளிக்கும் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

வெற்றிகரமான பவனியில் எருசலேமில் நுழைந்த அரசராம் இயேசு, புதுவிதமான அரசை அறிவிக்க வருகிறார், இந்த அரசு சிலுவையைக் கடக்கின்ற அரசு, இயேசு தன்னையே முழுவதும் அளிப்பதால் உயிர்த்தவராக நம் ஒவ்வொருவரிலும் பிரசன்னமாக இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

கிறிஸ்துவின் அரசு அகில உலகையும் அடக்கிய எல்லைகளற்ற அரசு, இது அரசியல் ரீதியானது அல்ல, முற்றிலும் அன்பைச் சார்ந்தது என்றும் அவர் கூறினார்.

நம்மைக் கடவுளுக்கு அர்ப்பணிப்பதற்கு இயேசுவின் வாழ்வும் மரணமும் உயிர்ப்பும் உத்தரவாதம் அளிக்கின்றன, இவ்வாறு அவரது அரசு நிஜமாகின்றது என்றும் திருத்தந்தை குருத்தோலை ஞாயிறு மறையுரையில் கூறினார்.

இத்திருச்சிலுவையானது இத்திங்களன்று மத்ரித்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு புனித வெள்ளி திருவழிபாட்டில் வைக்கப்படும், பின்னர் ஸ்பெயினின் அனைத்து மறைமாவட்டங்களுக்கும் திருப்பவனியாகக் கொண்டு செல்லப்பட்டு 2011ம் ஆண்டு சர்வதேச இளையோர் தினத்திற்கு மீண்டும் மத்ரித்துக்கு கொண்டு வரப்படும் என்று மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.