2009-04-06 14:57:33

ஏப்ரல் 07 புனித செவ்வாய் தவக்காலச் சிந்தனை நற்செய்தி யோவா. 13 :21-33, 36-38


இயேசு உள்ளம் கலங்கியவராய், ' உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ' என்று திட்டவட்டமாகக் கூறினார். யாரைப் பற்றி அவர் இப்படிக் கூறினார் என்று தெரியாமல் சீடர்கள் குழப்பமுற்று ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். இயேசுவின் சீடருள் ஒருவர் அவர் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்திருந்தார். அவர் மேல் இயேசு அன்பு கொண்டிருந்தார். சீமோன் பேதுரு அவருக்குச் சைகை காட்டி, ' யாரைப்பற்றிக் கூறுகிறார் எனக்கேள் ' என்றார். அவர், இயேசுவிடம், ' ஆண்டவரே அவன் யார்? ' என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ' நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான்' எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.

நாம் வாசிக்கும் இந்த யோவான் நற்செய்திப் பகுதியில், தன்னைக் காட்டிக் கொடுக்கும் சீடர் யார் என்று இயேசு சுட்டிக் காட்டுவதை அறிகிறோம். அன்று எருசலேமில் இயேசு தமது சீடர்களோடு பாஸ்கா உணவருந்திய மேஜை “ப” வடிவில் இருந்தது. வழக்கமாக யூதர்கள் இடது கையை மேஜை மீதி வைத்து இடதுபுறம் சாய்ந்தவண்ணம் உண்பர். சிறப்பு விருந்தினர் நடுவில் இருப்பார். அப்படியெனில் இயேசு யூதாஸ் இஸ்காரியோத்தோடு உரையாடியிருக்க வேண்டும். எனவே இயேசுவால் அதிகம் அன்பு செய்யப்பட்ட சீடர்களுள் யூதாஸ் இஸ்காரியோத்தும் ஒருவர் என யூகிக்க முடிகிறது. “என் பகைவன் என்னைக் காட்டிக் கொடுத்திருந்தால்கூட பரவாயில்லை, ஆனால் என்னோடு உண்பவன் அல்லவா எனக்கு எதிராகக் எழுந்துள்ளான்” என்று சங்கீத ஆசிரியர் சொல்வது இங்கு நம்மை நினைத்துப் பார்க்க வைக்கிறது. இந்தப் பச்சைத் துரோகத்தினின்று நாம் விலகி நிற்போமா!








All the contents on this site are copyrighted ©.