2009-04-05 17:59:40

மறையுரை 120409 .


நற்செய்தி தூய யோவான் 20, 01- 09 .



என்னை இருளின் மறுபக்கத்துக்கு அழைத்துச் செல்லும் என்கிறது ஓர் உபநிஷத்து . கூறியவர் மறுபுறத்தில் ஒளி இருக்கும் என நம்புகிறார் . அதை அடைய முடியும் என நம்புகிறார் .

இயேசுவின் வாழ்வையும் அவரது பாடுகளையும் பற்றிச் சொல்லும்போது சிலுவைச் சாவில் இருள் மண்டிக்கிடந்தது . ஆனால் இயேசுவின் வாழ்வில் ஒளிமயமான கட்டம் வந்துவிட்டது . கடவுளின் திருமகனாகிய ஏசுவின் ஒப்பற்ற கதை இப்போது தொடங்குகிறது . இன்று நாம் வாசிக்கக் கேட்ட நற்செய்தி நற்செய்திகளின் கொடுமுடியாகும் . இது இல்லாதிருந்தால் நற்செய்தியின் அளவு சிறிதாக இருந்திருக்கும் . நற்செய்தியின் முழக்கம் இருந்திருக்காது . ஒரு துணிச்சலான வினைத்திட்பம் தோல்வியைத் தழுவியதாக இருந்திருக்கும் . வீரமான ஒருவர் மனுக்குலத்துக்காக , அபாயமிக்க செயலில் இறங்கி அனைத்தையும் இழந்தவராக இருந்திருப்பர் . ஏன் கடவுளே தம்மிடம் இருந்த அனைத்தையும் பணயம் வைத்து தீமையின் , பாவத்தின் சக்திகளிடம் தோல்வி கண்டதாக வரலாறு முடிந்திருக்கும் .

இயேசுக் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் தான் கிறிஸ்தவ சபையை உருவாக்கி உற்சாகமில்லாது , அஞ்சி , அஞ்சிச் செத்துக் கொண்டிருந்த மனிதர்களை எதற்கும் அஞ்சாதவர்களாக்கி சாதனை புரியச் செய்தது . அவரது உயிர்த்தெழுதல் மிகப்பெரிய ஆற்றல்மிக்கதாக மனுக்குலத்தின் சித்தாத்தந்தங்களையே மாற்றிவிட்டது . கிறிஸ்தவம் கல்வாரிச் சிலுவையில் அதன் அடையாளத்தைக் கண்டு கொண்டது . இயேசுக் கிறிஸ்துவின் மாபெரும் தியாகத்திலிருந்து கிறிஸ்தவம் அதனுடைய தெய்வீகத் தூண்டுதலையும் கிளர்ச்சியூட்டும் உள்ளார்வக் கொள்கைகளையும் பெற்றுக் கொண்டது .

புதிய ஏற்பாடு பெருமகிழ்ச்சி கொள்கிறது . முக்கியமாக காலிக் கல்லறை இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு நிரூபணமாக நிற்கிறது . கடவுள் எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளார் என்று கொண்டாடுகிறது . பாவமும் தீமையும் தகர்க்கமுடியாதவையாகவையாக , அழிக்கமுடியாதவையாக இருந்தாலும் நொறுக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டது என்பதற்கு வெற்றுக் கல்லறை சான்றாக நிற்கிறது .

கல்லறையின் அமைதியில் மாபெரும் மீட்பர் படுத்திருந்தார் .உலா வரும் கிரகங்களும் சூரியனும் மூன்றாம் நாள் எனப் புலர்ந்து நின்றன . நரகமும் கல்லறையும் இணைந்த சக்தி அவரை அடக்கிப்பார்த்தும் தோற்றுப்போயின . திடீரென எழுந்தார் வெற்றி வீரர் . அவர்களது வலுவற்ற சங்கிலியை அறுத்தார் .

அந்தக் கூட்டுப் புழு மெல்ல மெல்ல முணகியது . தவித்தது . தடுமாறியது . சிறிது நேரத்துக்கெல்லாம் கூட்டுப் புழு வண்ணத்துப்பூச்சியாக விண்ணில் பறந்தது . அதே போலத்தான் கல்லறையின் கதவு திறந்தது . காரிருள் மறைந்தது .இயேசு உயிர்த்தெழுந்தார் . கூட்டுப்புழுவுக்கும் வண்ணத்துப் பூச்சிக்கும் எவ்வளவு பெரிய மாற்றம் . அப்படித்தான் இயேசுவின் உயிர்த்த உடலும் . இறந்த லாசர் உயிர்பெற்றது போலும் , நயீம் நகர விதவையின் இறந்த மகன் திரும்பி வந்தது போலும் கிறிஸ்து உயிர்த்து வரவில்லை .கிறிஸ்துவின் உடல் கடவுள் திருமகனின் உடலாக உருமாற்றம் பெற்று உ.யிர்த்தது . அது மிக உயர்ந்த மகிமைப்படுத்தபட்ட உடல் . அது முழுமையாக வாழ்ந்ததோடு , பிறருக்கு வாழ்வு கொடுப்பதாக இருந்தது .

விதை ஒன்று விதைக்கப்படும்போது அழிவுக்குரியதாக இருந்தாலும் மாண்புக்குரியதாக உயிர் பெற்று எழுகிறது . கிறிஸ்துவின் உடலும் கடவுளின் தூய ஆவிக்குரிய உடலாக உயிர்த்தெழுந்தது . கிறிஸ்து உ.யிர்த்தெழுந்தது போல நாமும் உயிர்த்தெழுவோம் என்கிறார் தூய பவுல் அடிகளார் . நாம் விண்ணைச் சார்ந்த இயேசுவின் சாயலைக் கொண்டிருப்போம் என்கிறார் பவுல் .

இயேசுவின் ஆற்றலிலும் உயிர்த்த வாழ்விலும் பங்கு பெற நாம் சாகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை . இப்பொழுதே நாம் உயிர்த்த இயேசுவின் வல்லமையில் பஙகு பெறலாம் . நாம் செய்யவேண்டியதெல்லாம் நாம் நம் இதயத்தை இயேசுவுக்குத் திறந்து வைக்க வேண்டும் .

புற்று நோயால் துன்புற்ற ரோஜர் என்பவர் தமது இறுதி வேளை நெருங்கியபோது கடவுளின் அருளைப் பெற்றார் . நலம் பெறவில்லை . மிகப்பெரிய ஒளியைப் பெற்றார் . அது ஒரு மிகப் பெரிய கடவுளின் கொடை என அவர் நம்பினார் . அவர் கூறினார் – பல காரியங்களைப் நான் மிக முக்கியம் என்று எண்ணியிருந்தேன் . சாகும் தருவாயில் அவையெல்லாம் மிக அற்பமாக எனக்குத் தெரிந்தன என்கிறார் ரோஜர் . காலம் மிகவும் பொன்னானதாக ஆகிவிட்டது . கடவுள் மிக உண்மையானவர் . அவருடைய வல்லமையை நான் உணர்கிறேன் எனக்கூறுகிறார் அவர் . கடவுள் என்னை அன்பு செய்தார் என்று எனக்குத் தெரியும் . ஆனால் எவ்வளவு அன்பு செய்தார் என்று நான் இப்பொழுதுதான் உணர்ந்து கொண்டேன் என ரோஜர் மகிழ்ச்சியோடு கூறுகிறார் .



நம் வாழ்விலும் நாம் இயேசுவின் வல்லமையிலும் சக்தியிலும் இப்பொழுதே பங்கேற்க முடியும் .

நம் அன்பு நிராகரிக்கப்படும் ஒவ்வொருமுறையும் நாம் மீண்டும் அன்பு செய்யும்போது , உயிர்த்தெழுந்த இயேசுவின் வல்லமையில் நாம் பங்கு பெறுகிறோம் . நம் நம்பிக்கைக்கு எதிராக துரோகம் புரியப்பட்டிருந்தும் நாம் நம் நம்பிக்கையைத் தெரிவிக்கும் ஒவ்வொருமுறையும் நாம் இயேசுவின் உயிர்த்தெழுதலில் பங்கு பெறுகிறோம் . நாம் தோல்வியுறும் ஒவ்வொரு முறையும் மீண்டும் நாம் முயலும்போது நாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெறுகிறோம் .

இனி எதுவும் நம்மை அழிக்கமுடியாது . வேதனையோ , சாவோ எதுவும் நம்மை அழிக்கமுடியாது என்பதே கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவின் நற்செய்தியாகும் . ஒவ்வொரு புனித வெள்ளிக்கிழமைக்கும் ஒரு உயிர்ப்பு ஞாயிறு உண்டு என கிறிஸ்துவின் உயிர்ப்பு உறுதி செய்கிறது . உயிர்த்த இயேசுவின் அருளை நிறைவாகப் பெற நம் இதயங்களை இயேசுவின் வருகைக்குத் திறந்து வைத்திருப்போம் .








All the contents on this site are copyrighted ©.