2009-04-05 17:55:25

திருத்தந்தையின் குருத்து ஞாயிறு விழாவுக்கான மறையுரை-050409


குருத்து ஞாயிற்று விழா தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடந்தது . பல்லாயிரக்கணக்கான மக்கள் குருத்தோலைகளோடு வழிபாட்டில் கலந்து கொண்டனர் . முக்கியமாக இளைஞர் தின விழாவையொட்டி உரோமையின் ஆயிரக்கணக்கான இளையோர் ஞாயிறு வழிபாட்டில் கலந்து கொண்டனர் . வசந்த கால இளஞாயிறு இதமாகச் சூடேற்றிக் கொண்டிருந்தது .

திருத்தந்தை வாசகங்களுக்குப் பிறகு தமது மறையுரையைத் தொடங்கினார் .

மக்கள் கூட்டத்தோடு இயேசுவும் எருசலேத்துக்குப் பாஸ்கா விழாவுக்காகச் சென்றார் . அவர் செல்லும் வழியில் எரிக்கோவுக்கு அருகில் பார்த்தேமேயுஸ் என்ற பார்வை இழந்தவருக்குப் பார்வை அளித்தார் என்றார் திருத்தந்தை . கண் ஒளி பெற்றவரும் இயேசுவோடு சென்ற கூட்டத்தோடு சேர்ந்து கொண்டார் . தாவீதின் வேந்தருக்குரிய சின்னமாக, அமைதியின் சின்னமாக தாழ்ச்சிமிக்க கழுதை இருந்தது . தாவீதின் வழித்தோன்றலாகிய இயேசுவும் கழுதையின் மேல் ஏறி எருசலேத்துக்குப் பவனியாகச் சென்றார். மக்கள் ஆண்டவர் பெயரால் வருபவர் வாழி , நம் தந்தையாகிய தாவீதின் அரசு வாழ்க . விண்ணகத்தில் ஓசான்னா என மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர் . அவர்கள் என்ன நினைத்துக்கொண்டு வாழ்த்தொலி எழுப்பினார்கள் என நமக்குத் தெரியாது . ஆனால் இயேசு கொண்டு வரும் அரசு இறை அரசு . அதையே ஆளுநர் பிலாத்துக்கு முன்னர் இயேசு தெரிவித்தார் . இயேசுவின் அரசு இவ்வுலகைச் சார்ந்தது அன்று . ஒருவேளை நாமும் இவ்வுலகைச் சார்ந்தது என நினைத்திருக்கலாம் .





திருத்தூதர் யோவான் இந்தப் புதிய இறை அரசு பற்றி விளக்கம் அளிக்கிறார் . வந்திருந்த திருப்பயணியரில் கிரேக்கர்களும் இருந்திருக்கிறார்கள் . அவர்கள் இயேசுவைக் காண விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அவர்களும் கடவுளை வழிபட வந்துள்ளார்கள் . இயேசு கூறுகிறார் அவரது கோவில் உலகத்து நாடுகள் அனைத்துக்கும் சொந்தமாக இருக்கும் . உலகத்தார் அனைவரும் தம் தந்தையின் கோவிலில் வணங்க வருவர் எனக்கூறுகிறார் இயேசு . கிரேக்கர்களைப் போல நாமும் இயேசுவைக் காண வந்திருக்கிறோம் என்று மறையுரை ஆற்றினார் திருத்தந்தை . சென்ற ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இளையோர் மாநாடு நடந்தது . அங்கு ஏற்றப்பட்ட தீபம் இங்கு கொண்டுவரப்பட்டு ஸ்பெயின் நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது என்றார் திருதநதை .

கிரேக்கர்களை இயேசு சந்தித்ததைப்பற்றி நற்செய்தியில் தெரிவிக்கப்படவில்லை . ஆனால் இயேசு அதுபோது திருவாய் மலர்ந்து அருளிய வாக்கை நாம் அறிவோம் . கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய அது பலன் தராது . மடிந்தால்தான் அது மிகுந்த பலன் தரும் என அருளப்பர் நற்செய்தியில் இயேசு கூறியதை திருத்தந்தை மேற்கோள்காட்டினார் . அந்தக் கோதுமை மணிபோல இயேசுவும் மரித்து உயிர்த்து எழவேண்டும் என்பதை நாசூக்காகத் தெரிவிக்கிறார் . சாவுக்குப் பின்னர் மூன்றாம் நாளில் உயிர்த்த இயேசு காலம் , இடம் இவற்றைக் கடந்தவராக உலகம் முழுவதையும் , வரலாறு முழுவதையும் நிரப்புகிறார் . உயிர்த்த இயேசு கிரேக்கர்களுக்கும் சொந்தமாகிறார் . அவர்கள் கலாச்சாரத்தையும் , மொழியையும் , தமது நற்செய்தியால் வண்ணம் பூசுகிறார் .

இயேசுவின் இறை அரசு சிலுவையில் தொடங்குகிறது . உ.யிர்த்த இயேசு எல்லோருக்கும் சொந்தமாகிறார்.

நாம் பெறும் தேவ நற்கருணையில் கோதுமை மணியின் பலனை நாம் அனுபவிக்கிறோம் என்றார் திருத்தந்தை . இறை அரசு கிறிஸ்துவின் இறப்பால் வந்தது . அவருடைய உயிர்ப்பால் தாவீதின் அரசு எல்லைகளைக் கடந்து செல்கிறது என்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . இது நாம் பேசும் உலகைச் சார்ந்த அரசு அல்ல . மாறாக அன்பின் அரசு . நாம் சுதந்திரமாக இயேசுவைத் தேர்ந்து கொண்டு அவருடைய சீடர்கள் ஆகிறோம் . நமது அன்பு இயேசுவின் அன்புக்கு பிரதி அன்பைக் காட்டுகிறது . இவ்வன்பு உலகையெல்லாம் தழுவுகிறது . சிலுவையின் வழி நாம் நம் தன்னலத்தைத் துறந்து உலகையே நமது குடும்பமாக ஏற்றுக் கொள்ளவேண்டும் எனத் திருத்தந்தை மொழிந்தார் .

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிவது போல தம் வாழ்வை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு யான் எனது என்று தமக்குத்தாமே வாழ்கிறவர் வாழ்வை இழந்து விடுவார் என இயேசு கூறுகிறார் . நம் வாழ்வை பிறர் வாழ அர்ப்பணிக்கும் போதுதான் நாம் பெருவாழ்வைப் பெறுகிறோம் . அதையே கடவுள் விரும்புகிறார் என்றார் திருத்தந்தை . நாம் தான் எனது என்ற ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் . இது நாம் நமக்கே இறந்து பிறருக்காக , பிறர் வாழ உயிர்ப்பதாகும் . இதுவே நல்லதொரு வாழ்க்கைத் தத்துவமாகும் . இயேசுவின் சிலுவைக்கும் உயிர்ப்புக்கும் நாம் சரி என்று ஆம் என்று சொல்லத் துணிதல் வேண்டும் என திருத்தந்தை இளையோருக்கு அறிவுறுத்தினார் . தியாக வாழ்வே அருமையான வாழ்வு என்றார் திருத்தந்தை .

இறுதியாக , இயேசு கலக்கமுற்றதாகத் திருத்தூதர் நற்செய்தியில் கூறுகிறார் . ஆனால் இயேசு தம் வாழ்வை தம் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார் . தந்தையே உமது திருநாமத்தை மகிமைப்படுத்தும் . என்னுடைய விருப்பம் அல்ல , மாறாக உமது விருப்பம் நிறைவேறுக என இயேசு செபிக்கிறார் . தம் தந்தையின் புகழும் அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதையுமே இயேசு மிக முக்கியமானதாகக் கருதுகிறார் . நாமும் நம் வாழ்வில் கடவுளின் திரு உளத்தையே எப்பொழுதும் செயல்படுத்தத் தயாராக இருக்கவேண்டும் . தந்தையின் விருப்பம் உண்மையானது . அன்பு மயமானது . இயேசுவின் வாழ்வும் சிலுவைச் சாவும் , உயிர்ப்பும் இயேசு தந்தையின் நிலை நாட்டியது . இயேசுவை நாமும் பின் தொடர்வோம் என்றார் திருத்தந்தை .

முடிவில் ஸ்பெயினில் நடக்க உள்ள இளையோர் தினத்துக்கு சிட்னியிலிருந்து வந்த தீபம் கொண்டு செல்லப்படுவதைப் பற்றிக் கூறிய திருத்தந்தை இயேசுவின் சிலுவை உலகின் ஒரு கோடி முனையிலிருந்து மறுகோடி முனை மட்டும் பரந்திருக்கும் என்றார் திருத்தந்தை . உலகின்மீது அன்புகூர்ந்த தந்தையாகிய கடவுள் உலகு உய்வதறகாக தம் மகனையே தந்தார் . இந்தத் தெய்வத்திருமகன் இயேசுவின் சிலுவையை நாமும் ஏற்று , அவரோடு இணைந்து வாழ்வின் பயணத்தைத் தொடர்வோம் என்றார் திருத்தந்தை . இது நம் வாழ்வை வளப்படுத்தும் . சிறப்பானதாக்கும் . நமக்கு விடுதலை தந்து நம் வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்







All the contents on this site are copyrighted ©.