2009-04-04 14:40:55

இளையோர் மத்தியில் பணி செய்வோர் கிறிஸ்துவின் நற்செய்தியை மேய்ப்புப்பணி தாகத்தோடு ஆற்ற கர்தினால் ரைல்கோ அழைப்பு


ஏப்ரல்04,2009. இளையோர் மத்தியில் பணி செய்வோர் சாதாரண நிலையை விடுத்து கிறிஸ்துவின் நற்செய்தியை மேய்ப்புப்பணி தாகத்தோடு ஆற்றுமாறு கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ரைல்கோ அழைப்புவிடுத்தார்.

இளையோர் திருப்பணியாளர்கள்- சிட்னி 2008 லிருந்து மத்ரித் 2011 என்ற தலைப்பில் உரோமையில் நடைபெற்று வரும் மூன்று நாள் சர்வதேச கூட்டத்தில் உரையாற்றிய திருப்பீட பொது நிலையினர் அவைத் தலைவர் கர்தினால் ரைல்கோ, இளையோர்க்கானப் பணி மிகுந்த ஆர்வத்துடன் செய்யப்பட வேண்டும் என்றார்.

உலக இளையோர் தினங்களில் பணியாற்றும் திருப்பணியாளர்கள் இளையோர் எதிர்கொள்ளும் இன்றைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மிகத்திறமையுடன் உதவுகிறார்கள் என்றார்.

இக்கூட்டத்தில் 70 நாடுகளின் பிரதிநிதிகளும் 35, சர்வதேச கத்தோலிக்கக் குழுக்கள், கழகங்கள் இயக்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.

வாழும் கடவுள் மீது நமது நம்பிக்கையை கொண்டுள்ளோம் என்ற தலைப்பில் இவ்வாண்டின் உலக இளையோர் தினம் இக்குருத்தோலை ஞாயிறன்று அந்தந்த மறைமாவட்டங்களில் சிறப்பிக்கப்படுகின்றது.

இஞ்ஞாயிறு காலை வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிகழ்த்தும் திருப்பலியில் சிட்னி இளையோர், மத்ரித் இளையோரிடம் உலக இளையோர் தினத் திருச்சிலுவையை அளிப்பர்.








All the contents on this site are copyrighted ©.