2009-04-01 14:40:54

சர்வதேச மதியிறுக்கம் விழிப்புணர்வு தினம்


ஏப்ரல் 01,2009. ஏப்ரல் 2ம் நாளை சர்வதேச மதியிறுக்கம் விழிப்புணர்வு தினமாகக் கடைபிடிப்பதற்கு ஐ.நா.பொது அவை தீர்மானித்ததன் மூலம், சரியான மூளை வளர்ச்சி இல்லாதவர் பற்றி உலக அளவில் மிகுந்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கான சர்வதேச முயற்சிகளைத் தூண்டுவதற்கு உதவியுள்ளது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.

இவ்வுலக தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள மூன், இன்று சமூகத்திற்குப் பெரும் சவாலாக இருக்கும் இவ்விவகாரம் குறித்த நேர்மறையான கண்ணோட்டங்களை அடைவதற்கு சிறாருக்கும் மற்றவருக்கும் உதவிகள் செய்யப்பட வேண்டுமென்று விண்ணப்பித்துள்ளார்.

இதனை அடைவதற்குத் தளராமல் உழைத்தால் இதனை அடையலாம் என்று கடந்த ஆண்டின் அனுபவங்கள் தெரிவிக்கின்றன என்றும் ஐ.நா.பொதுச் செயலரின் செய்தி கூறுகிறது.

இந்த உலக தினம் கடைபிடிக்கப்படுவதற்கு ஐ.நா.பொது அவையில் பரிந்துரைத்தது கத்தார் நாடாகும்..

மதியிறுக்கம் என்பது ஒருவருடைய மக்கள் தொடர்பு திறன், சமுதாய அரங்கில் செயல்பாடுகள், ஆர்வம் கொள்ளும் துறைகள், நடத்தைப் பாங்கு போன்றவை இயல்பிற்கு மாறாக அமைவதற்குக் காரணமான மூளை வளர்ச்சி வேறுபாட்டைக் குறிக்கும்.








All the contents on this site are copyrighted ©.