2009-03-31 14:57:08

பிலிப்பைன்சில் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் மூன்று செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் விடுதலை செய்யப்பட திருத்தந்தை அழைப்பு


மார்ச்31,2009. பிலிப்பைன்சில் இவ்வாண்டு ஜனவரி 15 முதல் அபு சாயப் இசுலாமிய தீவிரவாதக் குழுவால் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் மூன்று செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகத் திருப்பீடப் பத்திரிகைத் துறையின் செய்தி தெரிவிக்கிறது.

பிலிப்பைன்சின் சுலு மாகாண சிறையின் குடிநீர் திட்டம் ஒன்றைப் பார்வையிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த வழியில் செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் சுவிஸ் நாட்டின் ஆன்ரெயாஸ் நோட்டர், இத்தாலியின் யூஜெனியோ வாக்னி பிலிப்பைன்சின் மேரி ஜான் லாக்காபா ஆகியோர் கடத்திச் செல்லப்பட்டனர்.

ஜோலோ தீவின் 15 கிராமங்களிலிருந்து காவல்துறையும் இராணுவமும் வெளியேறாவிடில் கடத்தப்பட்டுள்ள ஒருவரைத் தலைதுண்டித்துக் கொல்லவுள்ளதாக அபு சாயப் தீவிரவாதிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளதைக் குறித்து கவலையை வெளியிட்ட திருத்தந்தை, இவர்கள் விடுவிக்கப்படுவதுடன் இப்பிரச்சனைக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் என விண்ணப்பிப்பதாகவும் திருப்பீடப் பத்திரிகைத் துறை வெளியிட்ட செய்தி கூறுகிறது.

இதற்கிடையே, தீவிரவாதிகளின் இவ்வச்சுறுத்தலை முன்னிட்டு தென் பிலிப்பைன்சில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.